பலாத்காரம் செய்த போலீசார்: குறிப்பு எழுதி வைத்து பெண் டாக்டர் தற்கொலை
பலாத்காரம் செய்த போலீசார்: குறிப்பு எழுதி வைத்து பெண் டாக்டர் தற்கொலை
ADDED : அக் 24, 2025 04:34 PM

மும்பை: மஹாராஷ்டிராவில் பெண் டாக்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன்னர், போலீசார் தன்னை பலாத்காரம் செய்ததுடன், மனரீதியாக துன்புறுத்தியதாக கையில் குறிப்பு எழுதி வைத்தார்.
மஹாராஷ்டிராவின் சதாராவில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் பெண் டாக்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலைக்கு முன்னர் அந்த பெண் டாக்டர் தனது இடது கையில் தனது மரணத்துக்கு காரணம் குறித்து குறிப்பு எழுதி வைத்து இருந்தார்.
அதில், போலீஸ்காரர் கோபால் பத்னே தான் எனது மரணத்துக்கு காரணம். அவர் நான்கு முறை என்னை பலாத்காரம் செய்தார். அத்துடன் கடந்த ஐந்து மாதங்களாக என்னை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கொடுமைப்படுத்தினார் எனத் தெரிவித்துள்ளார். மேலும் பிரசாந்த் பங்கர் என்ற காவலர் தன்னை உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தியதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. மாநில அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. தகவல் அறிந்த முதல்வர் பட்னாவிஸ், டாக்டர் தற்கொலை குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில், கோபால் பத்னே சஸ்பெண்ட் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொரு போலீஸ்காரரை தேடும் பணி நடந்து வருகிறது.

