மக்கள் மீது இரக்கமில்லாத திரிணமுல் அரசு: பிரதமர் மோடி விமர்சனத்தால் மம்தா அதிருப்தி
மக்கள் மீது இரக்கமில்லாத திரிணமுல் அரசு: பிரதமர் மோடி விமர்சனத்தால் மம்தா அதிருப்தி
ADDED : மே 29, 2025 05:51 PM

புதுடில்லி: ''மேற்கு வங்க மக்கள் மீது திரிணமுல் காங்கிரஸ் அரசு இரக்கம் காட்டவில்லை,'' என பிரதமர் மோடி கூறினார். இதற்கு பதிலளித்துள்ள முதல்வர் மம்தா பானர்ஜி, தைரியம் இருந்தால், சட்டசபைக்கு நாளையே தேர்தல் நடத்தட்டும். அதனை சந்திக்க தயார் எனக்கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: மேற்குவங்கம் தொடர்ச்சியாக பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது.
அதில் முதலாவது சமூகத்தில் வன்முறை மற்றும் குழப்பம் நிலவுவது
அடுத்தது, கொடூர குற்றங்களில் இருந்து தாய்மார்கள் மற்றும் சகோதரிகளை பாதுகாப்பது.
மூன்றாவதாக வேலைவாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கடுமையான விரக்தி.
நான்காவதாக அமைப்புகள் மீது குறைந்து வரும் நம்பிக்கையின்மை.
ஐந்தாவதாக ஏழைகளின் உரிமைகளை திருடும் மாநிலத்தை ஆளும் கட்சியின் சுயநல அரசியல் என்ற பிரச்னைகளை சந்தித்து வருகிறது.
இங்கு அனைத்திலும் ஊழல் நடக்கிறது என்பதற்கு ஆசிரியர் தேர்வு வாரிய முறைகேடு சிறந்த உதாரணம். ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் குடும்பங்களின் எதிர்காலத்தை திரிணமுல் காங்கிரஸ் சிதைத்ததுடன், அவர்களின் குழந்தைகளை உதவியற்றவர்களாக மாற்றி உள்ளது. ஆசிரியர்கள் இல்லாமல் லட்சக்கணக்கான குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு உள்ளது. மாநிலத்தின் கல்வி அமைப்பு கெட்டு போயுள்ளது. திரிணமுல் காங்கிரஸ் தலைவர்கள் பெரிய பாவத்தை செய்துள்ளனர். ஆனால், தற்போதும் அவர்களின் தவறுகளை ஒப்புக் கொள்ளாமல் நீதிமன்றங்கள் மீது பழியை போடுகின்றனர்.
வக்பு சட்டத்திற்கு எதிராக முர்ஷிதாபாத் மற்றும் மால்டா ஆகிய மாவட்டங்களில் நடந்த வன்முறை மாநில அரசின் இரக்கமின்மையை காட்டுகிறது. திருப்திபடுத்தும் அரசியல் என்ற பெயரில் குண்டர்களின் கைகள் அவிழ்த்துவிடப்பட்டன. மக்களின் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டாலும் போலீசார் வேடிக்கை பார்த்தனர். இப்படி தான் ஒரு அரசு செயல்பட வேண்டுமாஇங்கு, பல்வேறு விஷயங்களில் உயர்நீதிமன்றங்கள் தலையிட வேண்டிய நிலை உள்ளது.
இனியும் திரிணமுல் காங்கிரஸ் அரசு மீது மேற்கு வங்க மக்கள் நம்ப மாட்டார்கள். இந்த அரசு தேவையில்லை என அவர்கள் கண்ணீருடன் கூறுகின்றனர்.பஹல்காமில் பெண்களின் சிந்தூரை பயங்கரவாதிகள் அழித்தனர். ஆனால், சிந்தூரின் வலிமையை நமது ராணுவ வீரர்கள் உணர வைத்தனர். பயங்கரவாதிகளின் உள்கட்டமைப்பை நாம் அழித்தோம். இதனை பாகிஸ்தான் கற்பனை செய்து கூட பார்க்கவில்லை. உலகிற்கு நேர்மறையான விஷயத்தை செய்யாமல், பயங்கரவாதத்தையே பாகிஸ்தான் அளித்து உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இது தொடர்பாக முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது; இன்று பிரதமர் பேசியது கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். கவலையும் ஏற்பட்டது. நாட்டிற்காக எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்த நிலையில், பிரதமர் முன்னிலையில், அவரது அமைச்சர்கள், 'ஆபரேஷன் சிந்தூர்' போன்று 'ஆபரேஷன் பெங்கால்' என்ற நடவடிக்கையை துவக்குவோம் என்கின்றனர்.
அவர்களுக்கு தைரியம் இருந்தால், நாளையே மேற்கு வங்கத்திற்கு தேர்தலை அறிவிக்கட்டும். அதற்கு நாங்கள் தயார். உங்கள் சவாலை ஏற்க மேற்கு வங்கம் தயாராக உள்ளது. ஆனால், காலம் முக்கியமானது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எங்கள் கட்சி பிரதிநிதி அபிஷேக் பானர்ஜியும் மத்திய அரசின் குழுவில் உள்ளார். அவர் ஒவ்வொரு நாளும் பயங்கரவாதத்திற்கு எதிராக பேசி வருகிறார். ஆனால், அதே நேரத்தில் மத்திய அரசுக்கு முழு ஆதரவு அளிக்கும் மாநில அரசை, நரேந்திர மோடி பிரதமர் ஆக இல்லாமல், பா.ஜ., தலைவராக விமர்சித்து பேசுகிறார்.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து நான் எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால், ஒவ்வொரு பெண்ணையும் மதிக்க வேண்டும். இவ்வாறு மம்தா கூறினார்.