"நாங்கள் தான் மூன்றாவது பெரிய கட்சி": அகிலேஷ் யாதவ் மகிழ்ச்சி
"நாங்கள் தான் மூன்றாவது பெரிய கட்சி": அகிலேஷ் யாதவ் மகிழ்ச்சி
ADDED : ஜூன் 08, 2024 04:34 PM

லக்னோ: 'சமாஜ்வாதி கட்சி நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது' என அக்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் அகிலேஷ் யாதவ் கூறியதாவது: ஒருபுறம் தே.ஜ., கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. மறுபுறம் சமாஜ்வாதி கட்சி நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. எதிர்மறை அரசியல் முடிவுக்கு வந்துள்ளது. மக்கள் பிரச்னைகளை சரி செய்யும் அரசியல் சகாப்தம் துவங்கியுள்ளது. நாங்கள் மக்கள் இடம் இருந்து அதிக அன்பை பெற்றுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, எக்ஸ் சமூகவலைதளத்தில் அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீட் தேர்வில் மாணவர்கள் பலர் 100% மதிப்பெண்கள் எடுத்திருப்பது பெரிய குளறுபடியைக் காட்டுகிறது. பா.ஜ., ஆட்சியில், வினாத்தாள்கள் கசிவு சம்பவம் நடக்கிறது. இளைஞர்கள் அரசு தேர்வுகள் மீது வைத்திருந்த நம்பிக்கை இழக்கத் துவங்கியுள்ளனர். பா.ஜ., அரசின் மிகப்பெரிய தோல்விகளில் இதுவும் ஒன்று.
தண்டனை
இந்த விஷயத்தை நீதிமன்றம் தானாக முன் வந்து, முழுமையான விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். மேலும் எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதற்கான சாத்தியக் கூறுகளை அகற்ற வேண்டும். நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

