காங்., சொந்த நலனுக்காக வக்ப் விதிகளை மாற்றியது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
காங்., சொந்த நலனுக்காக வக்ப் விதிகளை மாற்றியது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
ADDED : ஏப் 14, 2025 01:22 PM

சண்டிகர்: ''காங்., சொந்த நலனுக்காக வக்ப் விதிகளை மாற்றியது'' என பிரதமர் மோடி குற்றம் சாட்டி உள்ளார்.
ஹரியானா சென்றுள்ள பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: காங்கிரஸ் அதிகாரத்திற்காக அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்தது. காங்கிரஸ் சொந்த நலனுக்காக வக்ப் விதிகளை மாற்றியது. வக்ப் பெயரில் லட்சக்கணக்கான ஹெக்டேர் நிலங்கள் உள்ளன. இந்த திருத்தப்பட்ட வக்ப் சட்டத்தின் மூலம் நிலங்கள் கொள்ளையடிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்படும்.
உத்தரகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, காங்கிரஸ் இதை எதிர்க்கிறது. இடஒதுக்கீட்டின் நன்மைகள் எஸ்.சி, எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., சமூகங்களைச் சென்றடைந்ததா என்பதை காங்கிரஸ் ஒருபோதும் யோசித்து பார்க்கவில்லை. அரசு டெண்டர்களில் மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது.
அம்பேத்கர், அரசியலமைப்பு சட்டத்தில், மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீட்டிற்கு இடமில்லை என்று கூறினார். 2014ம் ஆண்டிற்கு முன்பு, நாட்டில் 74 விமான நிலையங்கள் இருந்தன. ஆனால் இன்று 150 க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் உள்ளன. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 70 ஆண்டுகளில் 74 விமான நிலையங்கள் மட்டும் உருவாக்கப்பட்டு உள்ளன. இதனை கற்பனை செய்து பாருங்கள்?
ஒவ்வொரு ஆண்டும், நாட்டில் விமானத்தில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. எங்கள் அரசு ஏழைகளின் நலனையும், சமூக நீதியையும் உறுதி செய்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

