ஐ.எம்.எப்., பணம் சுண்டைக்காய்; அதை விட அதிகமா கொடுத்திருப்போம்; பாகிஸ்தானுக்கு சொல்கிறார் ராஜ்நாத்
ஐ.எம்.எப்., பணம் சுண்டைக்காய்; அதை விட அதிகமா கொடுத்திருப்போம்; பாகிஸ்தானுக்கு சொல்கிறார் ராஜ்நாத்
ADDED : செப் 30, 2024 07:58 AM

ஸ்ரீநகர்: 'இந்தியாவுடன் பாகிஸ்தான் நல்லுறவை பேணியிருந்தால், ஐ.எம்.எப்., அமைப்பிடம் அவர்கள் கேட்பதை விட பல மடங்கு அதிக நிதியுதவி நாங்களே கொடுத்திருப்போம்' என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர், பந்திபோரா மாவட்டத்தில் நடந்த பிரசார கூட்டத்தில், ராஜ்நாத் சிங் பேசியதாவது: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல், சாதாரண தேர்தல் அல்ல. இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் வலிமையை நிரூபிக்கும் தேர்தல். ஓட்டளிக்காமல் ஒரு நபர் கூட எஞ்சியிருக்கக்கூடாது என்று நான் விரும்புகிறேன். 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு, மக்கள் ஆர்வத்துடன் தேர்தலில் பங்கேற்றனர். இன்று ஸ்ரீநகரின் லால் சவுக்கில் தேசியக் கொடி ஏற்றப்படுகிறது. இன்று, காஷ்மீருக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதிக நிதியுதவி
பாகிஸ்தான் நண்பர்களுக்கு நான் கூறிக்கொள்வது என்னவென்றால் நமது உறவில் விரிசல் ஏற்பட்டது ஏன் என்பதை உணர வேண்டும். நாம் அனைவரும் அண்டை வீட்டார். இந்தியாவுடன் நல்லுறவை பேணியிருந்தால் பாகிஸ்தான் சர்வதேச செலாவணி நிதியத்திடம் (ஐ.எம்.எப்.,) கேட்பதை விட, பல மடங்கு அதிக நிதி வழங்கியிருப்போம். கடந்த 2014-15ம் நிதியாண்டில் காஷ்மீர் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி ரூ.90 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கினார். இந்த நிதியானது, நீங்கள் ஐ.எம்.எப்.,பிடம் இப்போது கேட்பதை விட பல மடங்கு அதிகம்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியது போல, நமது நண்பர்களை மாற்றிக் கொள்ளலாம். ஆனால், நமது அண்டை வீட்டாரை ஒருபோதும் மாற்றிக்கொள்ள முடியாது என்றார். அவரின் இந்த கூற்றை உணர்ந்து இந்தியாவுடனான உறவை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது ஒரு புதிய இந்தியா என்பதை பாகிஸ்தான் மறந்துவிடக் கூடாது.
தாக்குவோம்
பயங்கரவாதத்திற்கு எதிராக நாங்கள் போராட தயாராக இருக்கிறோம். தேவைப்பட்டால் எல்லைகளின் மறுபக்கத்திற்கும் சென்று தாக்குதல் நடத்துவோம். எல்லையின் மறுபுறத்தில் அமர்ந்து, இந்தியாவுக்கு தீங்கு விளைவிக்க திட்டமிடுபவர்களுக்கு, இந்தியாவில் ஏதேனும் பயங்கரவாத தாக்குதல் நடந்தால், அவர்கள் எங்கிருந்தாலும் அவர்களைத் தாக்குவோம் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

