பெண்ணிடம் 35 சவரன் நகை பறிப்பு; பெங்களூருவில் பதுங்கிய இருவர் கைது
பெண்ணிடம் 35 சவரன் நகை பறிப்பு; பெங்களூருவில் பதுங்கிய இருவர் கைது
ADDED : மே 20, 2025 06:59 AM

பாலக்காடு : பாலக்காடு அருகே, பெண்ணிடம் நகைக்கடை உரிமையாளர் போன்று நடித்து, 35 சவரன் நகைகளை அபேஸ் செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், பட்டாம்பியை சேர்ந்த பெண், தன், 35 சவரன் தங்க நகைகளை சமூக ஊடகம் வாயிலாக அறிமுகமான இருவர் பறித்து விட்டதாக, பட்டாம்பி போலீசாரிடம் புகார் அளித்தார்.
மாவட்ட எஸ்.பி., அஜித்குமாரின் அறிவுரையின்படி, இன்ஸ்பெக்டர் அன்ஷாதின் தலைமையிலான இரு சிறப்பு படை அமைத்து விசாரணை நடந்தது.
விசாரணையில், வடகரை மய்யன்னூர் பகுதி சேர்ந்த முகமது நஜீர், 29, கண்ணூர் இரிட்டி பகுதியைச் சேர்ந்த முபஷிர், 31, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இன்ஸ்பெக்டர் கூறியதாவது:
சமூக ஊடகம் வாயிலாக, நகைக்கடை உரிமையாளர் என பொய் சொல்லி புகார்தாரரை, முகமது நஜீர் தொடர்பு கொண்டுள்ளார்.
பழைய நகைகள் இருக்கிறதா என விசாரித்து, அவற்றின் புகைப்படத்தை கேட்டு பெற்றுள்ளார்.
பழைய டிசைன் நகைகள் அழகாக இருப்பதால், அதை போன்று நகை தயாரிக்க, பழைய நகையை புகைப்படம் எடுக்க அனுமதி கேட்டுள்ளார். அதற்கு, பணம் தருவதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து, மே 14ம் தேதி முபஷீருடன் பட்டாம்பிக்கு வந்த முகமது நஜீர், புகார்தாரரிடம் இருந்து 35 சவரன் தங்க நகைகளை பெற்று சென்றனர். அதன்பின், இருவரும் தலைமறைவாகி விட்டனர். பெங்களூருவில் இருவரும் பதுங்கி இருப்பது தெரிந்து, போலீசார் அங்கு சென்று கைது செய்தோம்.
பெண்ணிடம் பறித்த நகையை எங்கு அடகு வைத்துள்ளனர் என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது. முகமதுநஜீர் மீது, குற்றியாடி, வளயம், தலச்சேரி, வடகரை ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் இது போன்ற வழக்குகள் உள்ளது.
முபஷிர் மீது மாநிலத்தின் பல பகுதியில் போதை மாத்திரை கடத்தல், அடிதடி வழக்குகள் உள்ளது.
இவ்வாறு, கூறினார்.