கள்ளச்சாராய பலி 35 ஆனது பீஹாரில் 15 பேர் சிக்கினர்
கள்ளச்சாராய பலி 35 ஆனது பீஹாரில் 15 பேர் சிக்கினர்
ADDED : அக் 19, 2024 12:35 AM
பாட்னா: பீஹாரில், கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை, 35 ஆக உயர்ந்துள்ளது. கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக, 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பீஹார் மாநிலத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. தடையை மீறி, இங்குள்ள சிவான் மற்றும் சரண் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் விற்பனை நடக்கிறது. இரு மாவட்டங்களிலும், கடந்த 15ம் தேதி கள்ளச்சாராயம் குடித்த சிலர் வாந்தி மற்றும் பார்வையிழப்பு போன்ற பிரச்னைகளால் கடும் அவதியடைந்தனர்.
சிவான், சரண், பாட்னா போன்ற மருத்துவமனைகளில் அவர்கள் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், 25 பேர் நேற்று முன்தினம் பலியாகினர்.
இந்நிலையில், மேலும் 10 பேர் நேற்று பலியாகினர். இதனால், கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை, 35 ஆக அதிகரித்தது.
இதில், சிவான் மாவட்டத்தின் மகார் மற்றும் அர்யா பஞ்சாயத்துகளில் 28 பேர்; சரண் மாவட்டத்தின் இப்ராகிம்பூர் பகுதியில் ஏழு பேர் பலியானதாக போலீஸ் டி.ஐ.ஜி., நிலேஷ் குமார் தெரிவித்தார். மேலும், 25 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளச்சாராய பலி சம்பவம் தொடர்பாக, 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து இரு குழுக்கள் அமைத்து போலீசார் விசாரித்து வருவதாகவும், டி.ஜி.பி., அலோக் ராஜ் தெரிவித்தார்.