தரையிறங்கிய விமானத்தில் மோதி 36 பிளமிங்கோ பறவைகள் பலி
தரையிறங்கிய விமானத்தில் மோதி 36 பிளமிங்கோ பறவைகள் பலி
ADDED : மே 21, 2024 09:32 PM

மும்பை : மும்பையில் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தில் மோதி, 36 பிளமிங்கோ பறவைகள் பலியாகின.
மஹாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பைக்கு, 300க்கும் மேற்பட்ட பயணியருடன் எமிரேட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் அங்குள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
ஓடுபாதையில் விமானம் தரையிறங்கும் முன், அந்த பகுதியில் பிளமிங்கோ பறவைகள் கூட்டமாக பறந்தன.
இதன் காரணமாக, அந்த பறவைகள் மீது விமானம் மோத நேரிட்டது. விமானம் தரையிறங்கியதும், ஆய்வுசெய்த அதிகாரிகள் விமானத்தின் சில பாகங்கள் சேதமடைந்ததை கண்டறிந்தனர். இதன் காரணமாக, மீண்டும் துபாய் செல்ல இருந்த அந்த விமானத்தின் புறப்பாடு ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையே, விமானம் மோதியதில் மும்பை புறநகர் பகுதியான காத்கோபாரில், 36 பிளமிங்கோ பறவைகள் இறந்து கிடந்ததாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, அங்கு சென்று ஆய்வு செய்த வனத்துறை அதிகாரிகள் சிதறி கிடந்த பிளமிங்கோ பறவைகளின் உடல் பாகங்களை சேகரித்து, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
பிளமிங்கோ பறவைகள், விமானம் மோதியதால் இறந்ததா அல்லது வேறு காரணங்களால் இறந்ததா என்பது குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்து, சூழலியலாளர்கள் இடையே மிகுந்த கவலையை
ஏற்படுத்தி உள்ளது.

