ADDED : ஜன 07, 2025 12:10 AM

மங்களூரு: கர்நாடகாவின், மங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.
தெலுங்கானாவைச் சேர்ந்தவர் தேஜா. இவரது மனைவி பானோத் துர்கா, ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தார். இரண்டு நாட்களுக்கு முன், இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. குடும்பத்தினர் அவரை, கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா, மங்களூரின் கங்கனவாடியில் உள்ள பாதர் முல்லா மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு, அறுவை சிகிச்சை வாயிலாக நேற்று முன்தினம் பிரசவம் நடந்தது. டாக்டர்கள் குழுவினர், அறுவை சிகிச்சை செய்து இரண்டு ஆண், இரண்டு பெண் குழந்தைகளை வெளியே எடுத்தனர். இவை குறை பிரசவத்தில் பிறந்தன.
குழந்தைகள் முறையே 1.1 கிலோ, 1.2 கிலோ, 800 கிராம், 900 கிராம் எடையில் உள்ளன. எனவே ஐ.சி.யு.,வில் வைத்து, சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பானோத் துர்காவுக்கு பிரசவம் பார்த்த டாக்டர்களில் ஒருவரான ஜோய்லின் டி அல்மெடா கூறுகையில், “நான்கு குழந்தைகள் பிறந்தது, மிகவும் அபூர்வமானது. ஏழு லட்சம் கர்ப்பிணியரில் ஒருவருக்கு மட்டுமே, இப்படி நான்கு குழந்தைகள் பிறக்கும்.
''எங்கள் டாக்டர் குழுவினர், மிகவும் அக்கறையுடன், தாய், சேய்களை பராமரித்து வருகின்றனர். தாய் ஆரோக்கியமாக இருக்கிறார்,” என்றார்.

