ADDED : ஜன 21, 2025 09:39 PM
தில்ஷாத் கார்டன்:சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 439 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தேசிய தலைநகர் பகுதியில் கடந்த 7ம் தேதி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அன்றிலிருந்து காவல் துறையினர் பல்வேறு சோதனைகளை நடத்தி வருகின்றனர். எல்லை சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
நடத்தை விதிகளை மீறியதாக 7ம் தேதி முதல் 20ம் தேதி வரை இதுவரை 439 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த காலகட்டத்தில் கலால் சட்டம் உட்பட பல்வேறு விதிகளின் கீழ் மொத்தம் 15,495 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 238 சட்டவிரோத துப்பாக்கிகள், 332 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 1 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள 38,075 லிட்டர் மதுபானம், 17 கோடிக்கு மேல் மதிப்புள்ள 104.90 கிலோ போதைப்பொருட்கள், 1,200க்கும் மேற்பட்ட தடைசெய்யப்பட்ட ஊசி மருந்துகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
அத்துடன் 3.22 கோடி ரூபாய் ரொக்கம், 37.39 கிலோ வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நகர காவல் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.