இரு வெவ்வேறு விபத்துகளில் கர்நாடகாவின் 4 வீரர்கள் பலி
இரு வெவ்வேறு விபத்துகளில் கர்நாடகாவின் 4 வீரர்கள் பலி
ADDED : டிச 26, 2024 06:40 AM

ஜம்மு - காஷ்மீர் மற்றும் மணிப்பூரில் நடந்த இரு வெவ்வேறு விபத்துகளில், கர்நாடகாவை சேர்ந்த நான்கு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பனோய் என்ற இடத்துக்கு, 10க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு, ராணுவ வாகனம் நேற்று முன்தினம் புறப்பட்டது. கரோவா என்ற இடத்துக்கு வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையில் இருந்து விலகி, 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இவ்விபத்தில், ஐந்து ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பலியான ஐந்து பேரில், பெலகாவி மாவட்டம், பன்தாநகரின் தயானந்த் திரகன்னனவர், 44, உடுப்பி மாவட்டம், குந்தாபூரின் கோட்டீஸ்வர் பிஜாதியாவைச் சேர்ந்த அனுாப், 33. பாகல்கோட் மாவட்டம், ரபகவி பனஹட்டியின் மஹாலிங்கபுராவைச் சேர்ந்த மகேஷ் மரிகொண்டா, 25, ஆகிய மூன்று பேர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள்.
தயானந்த் திரகன்னனவர் 25 ஆண்டுகளாகவும், அனுாப் 13 ஆண்டுகளாகவும், மகேஷ் மரிகொண்டா ஆறு ஆண்டுகளாகவும் ராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளனர். இவர்களில், தயானந்த், இரண்டு ஆண்டுகளில் ஓய்வு பெற இருந்தார்.
விபத்து குறித்து, 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் முதல்வர் சித்தராமையா பதிவு:
ஜம்மு - காஷ்மீரில் நடந்த விபத்தில், கர்நாடகாவை சேர்ந்த மூன்று ராணுவ வீரர்கள் பலியான செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்திற்கு, தைரியம் அளிக்க இறைவனை வேண்டுகிறேன். நாட்டிற்காக தியாகம் செய்த வீரர்களின் பணி என்றும் நிலைத்திருக்கும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்று வடகிழக்கில் உள்ள மணிப்பூர் மாநிலம், இம்பால் மாவட்டத்தின் பொம்பாலா என்ற பகுதியில் நேற்று முன்தினம் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இரு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இவர்களில், பெலகாவி மாவட்டம், சிக்கோடியின் குப்பனவாடி கிராமத்தை சேர்ந்த தர்மராஜ் கோட்டாவும், 43, ஒருவர். இன்னும் இரண்டு - மூன்று மாதங்களில் ஓய்வு பெற இருந்தார். இறந்த ராணுவ வீரர்களின் உடல்கள், இன்று கர்நாடகா கொண்டு வரப்படுகின்றன. - நமது நிருபர் -

