சம்பள பிரச்னையால் அதிருப்தி; பஸ்சுக்கு தீ வைத்த டிரைவர் 4 பேர் பலி
சம்பள பிரச்னையால் அதிருப்தி; பஸ்சுக்கு தீ வைத்த டிரைவர் 4 பேர் பலி
ADDED : மார் 22, 2025 03:43 AM
புனே : மஹாராஷ்டிராவில், நான்கு தனியார் நிறுவன ஊழியர்கள் உடல் கருகி உயிரிழந்த விவகாரத்தில், சம்பள பிரச்னையால் அதிருப்தி அடைந்த அந்நிறுவனத்தின் டிரைவர், பஸ்சுக்கு தீ வைத்தது தெரிய வந்துள்ளது.
மஹாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள ஹின்ஜேவாடி என்ற பகுதியில், 'வயோமா கிராபிக்ஸ்' என்ற கிராபிக் டிசைன் நிறுவனம் உள்ளது.
இந்நிறுவனத்தின் 10க்கும் மேற்பட்ட ஊழியர்களை ஏற்றிச் சென்ற மினி பஸ், கடந்த 19ம் தேதி காலை 7:00 மணிக்கு தீ பிடித்து எரிந்தது.
இதில், நான்கு பேர் உடல் கருகி பலியான நிலையில், டிரைவர் ஜனார்தன் ஹம்பர்டேகர், 52, உள்ளிட்டோர் காயமடைந்தனர்.
மின் கசிவு காரணமாக மினி பஸ் தீ பிடித்து எரிந்ததாக சந்தேகிக்கப்பட்ட நிலையில், டிரைவர் ஜனார்தன் ஹம்பர்டேகரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து, போலீசார் கூறியதாவது:
புனேயின் வார்ஜே பகுதியைச் சேர்ந்த ஜனார்தன் ஹம்பர்டேகர், 2006 முதல் தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிகிறார்.
அலுவலகத்திற்கு ஊழியர்களை மினி பஸ்சில் ஏற்றிச் செல்லும் போது, சிலருடன் அவருக்கு அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
கூடுதல் நேரம் பணிபுரிந்த போதும், ஜனார்தன் ஹம்பர்டேகருக்கு சம்பள பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், தீபாவளி போனசும் தரவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர், ஊழியர்களை பழிவாங்க திட்டமிட்டார்.
அதன்படி சம்பவத்தன்று, எளிதில் தீப்பற்றக்கூடிய ரசாயனம் தடவிய துணியை அவர் எடுத்து வந்துள்ளார்.
சிறிது துாரம் பஸ்சை ஓட்டிய அவர், தீப்பெட்டி வாயிலாக அந்த துணியை பற்ற வைத்தார். இதில் ஏற்பட்ட தீ, மளமளவென பஸ் முழுதும் பரவியது.
இதையடுத்து பஸ்சில் இருந்து டிரைவர் ஜனார்தன் ஹம்பர்டேகர் குதித்து விட்டார். எனினும் அவருக்கு சிறிய தீக்காயங்கள் ஏற்பட்டன. டிரைவர் இல்லாமல், 200 மீட்டர் துாரம் பயணித்த பஸ், ஒருவழியாக மரத்தில் மோதி நின்றது. இந்த தீ விபத்தில், நான்கு ஊழியர்கள் உயிரிழந்தனர்; சிலர் காயமடைந்தனர்.
இது விபத்து அல்ல; திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவம். சிகிச்சைக்கு பின், ஜனார்தன் ஹம்பர்டேகர் கைது செய்யப்படுவார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.