ADDED : ஜூலை 24, 2025 12:30 AM
குவாலியர்: மத்திய பிரதேசத்தின் குவாலியரில், கன்வார் யாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர், இரண்டு பேர் காயமடைந்தனர்.
ஆடி மாதத்தையொட்டி வட இந்தியாவில், பக்தர்கள் பாத யாத்திரையாக சிவன் கோவில்களுக்கு சென்று வழிபடுவது வழக்கம். இதனை கன்வார் யாத்திரை என்கின்றனர். மத்திய பிரதேசத்தின் குவாலியரைச் சேர்ந்த பக்தர்கள் கன்வார் யாத்திரை மேற்கொண்டிருந்தனர்.
ஆக்ரா - -மும்பை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள ஷிவ்புரி இணைப்பு சாலையில் ஏராளமானோர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 2:00 மணிக்கு வேகமாக வந்த கார் பக்தர்கள் கூட்டத்தில் புகுந்தது.
இதில் மூன்று பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் இருவர் காயமடைந்தனர். கார் டயர் வெடித்ததில் விபத்து நடந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. காரில் இருந்தவர்கள் தப்பியோடினர்.

