ADDED : நவ 03, 2024 11:52 PM
சண்டிகர்: பஞ்சாபில் ஓடும் ரயிலில் தடையை மீறி பட்டாசுகள் எடுத்து செல்லப்பட்ட நிலையில், அது வெடித்து சிதறியது. இதில், நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
பஞ்சாபின் அமிர்தசரசில் இருந்து மேற்கு வங்கத்தின் ஹவுராவுக்கு நேற்று முன்தினம் ரயில் சென்றது. இது, சிர்ஹிந்த் ரயில் நிலையம் அருகே சென்ற போது, ரயிலின் பொது பெட்டியில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.
உடனே ரயில் நிறுத்தப்பட்டு, சம்பவம் நிகழ்ந்த பகுதிக்கு ரயில்வே ஊழியர்கள், போலீசார், மீட்புக்குழுவினருடன் சென்றனர்.
அப்பெட்டியில், ஒரு பெண் உட்பட நான்கு பயணியர் படுகாயமடைந்து கிடந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதன்பின் வெடிவிபத்து நிகழ்ந்த பெட்டியில் போலீசார் ஆய்வு செய்ததில், பிளாஸ்டிக் பக்கெட் ஒன்றில் சிலர், தடையை மீறி பட்டாசுகளை எடுத்துச் சென்றதை கண்டறிந்தனர்.
ஓடும் ரயிலில், பட்டாசுகள் அடங்கிய பெட்டியை எடுத்து சென்றபோது அது உராய்ந்து, வெடித்து சிதறியதும் தெரிய வந்தது. இதற்கிடையே, ரயிலில் பட்டாசை எடுத்துச் சென்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.