சிறுவனை அடித்துக் கொன்ற 3 சிறுவர் உட்பட 4 பேர் கைது
சிறுவனை அடித்துக் கொன்ற 3 சிறுவர் உட்பட 4 பேர் கைது
ADDED : நவ 09, 2024 08:04 PM
புதுடில்லி:நண்பனின் சகோதரியிடம் சில்மிஷம் செய்த 15 வயது சிறுவனைக் கொலை செய்த 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
வடமேற்கு டில்லி சுபாஷ் பிளேஸ் பகுதியில் வசித்த ஜிதேந்தர்,15 மற்றும் நிதீஷ்,15 -- ஆகிய இருவரும் தங்கள் நண்பனின் தங்கையிடம் தினமும் சில்மிஷம் செய்துள்ளனர். இதுகுறித்து, சிறுமி தன் அண்ணனிடம் கூறினாள்.
இதையடுத்து, சிறுமியின் அண்ணன் மற்றும் அவரது மற்ற நண்பர்கள் நேற்று முன் தினம் இரு சிறுவர்களிடமும் விசாரித்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
மகேந்தர்,18, மற்றும் 3 பேர் சேர்ந்து ஜிதேந்தர் மற்றும் நிதீஷ் ஆகிய இருவரையும் சரமாரியாகத் தாக்கினர். நிதீஷை அவரது தாய் மீட்டு பகவான் மகாவீர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பரிசோதனை செய்த டாக்டர்கள் நிதீஷ் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர். ஜிதேந்தருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நிதீஷின் தாய் கொடுத்த புகார்படி சுபாஷ் பிளேஸ் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடினர்.
இந்நிலையில், மகேந்தர் மற்றும் மூன்று சிறுவர்களையும் ஷகுர்பூரில் நேற்று கைது செய்தனர்.
விசாரணையில், நிதீஷ் மற்றும் மகேந்தர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியதை ஒப்புக் கொண்டனர். விசாரணை நடந்து வருகிறது.