30 நாட்கள் ஆண் குழந்தையை விற்ற தாய் உட்பட 4 பேர் கைது
30 நாட்கள் ஆண் குழந்தையை விற்ற தாய் உட்பட 4 பேர் கைது
ADDED : டிச 11, 2024 11:51 PM
ராம்நகர்: கடனை அடைப்பதற்காக, பிறந்து 30 நாட்கள் ஆன ஆண் குழந்தையை விற்ற தாய் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
ராம்நகரில் வசித்து வரும் கணவரும், மனைவியும் கூலி வேலை செய்கின்றனர். தம்பதிக்கு ஐந்தாவதாக ஆண் குழந்தை பிறந்து 30 நாட்களே ஆகிறது.
குடும்பத்தினர் வறுமையில் வாடினர். இதை சமாளிக்க, 3 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி உள்ளனர். இந்த கடனை அடைக்க முடியாமல் தம்பதி திணறினர்.
அப்போது மனைவி, 'நம் ஐந்தாவது ஆண் குழந்தையை விற்று விடலாம்' என்ற விஷமத்தனமான யோசனையை கூறியுள்ளார். இதனை கணவர் ஏற்க மறுத்தார். 'இது போன்று சிந்திக்காதே' என மனைவியை திட்டியுள்ளார்.
கடந்த 5ம் தேதி மாலை, வேலையை முடித்துவிட்டு, கணவர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, 30 நாட்களே ஆகி இருந்த ஆண் குழந்தையை காணவில்லை. இது பற்றி மனைவியிடம் கேட்டார்.
'குழந்தைக்கும், எனக்கும் உடல்நிலை சரியில்லை. எனவே உறவினரிடம் குழந்தையை கொடுத்து, டாக்டரிடம் காண்பிக்க அனுப்பி உள்ளேன்' என்றார்.
இதை நம்பிய கணவர், துாங்கச் சென்றார். மறுநாள் காலையிலும் குழந்தையை காணவில்லை. மனைவியிடம் மீண்டும் விசாரித்துள்ளார்.
அவர் சரியாக பதில் கூறாததால், மனைவியுடன் சண்டை போட்டுள்ளனர். கோபத்தில் மனைவியை அடித்துள்ளார். பதிலுக்கு மனைவியும் அடித்துள்ளார். இதில் காயமடைந்த கணவர், போலீஸ் நிலையம் சென்று புகார் செய்தார்.
இதுகுறித்து, பெண் போலீசார் தாயிடம் விசாரித்தனர். அவரோ, முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். போலீசார், தங்கள் பாணியில் விசாரித்தனர்.
'குழந்தையை 1.5 லட்சம் ரூபாய்க்கு, பெங்களூரை சேர்ந்த பெண்ணிடம் விற்றுவிட்டேன்' என அசால்ட்டாக பதில் அளித்துள்ளார்.
பொம்மை விற்பது போல, பெற்ற குழந்தையை விற்ற தாய், அவரது இரு கூட்டாளிகள், குழந்தையை வாங்கிய பெண் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். குழந்தை மீட்கப்பட்டு, மாண்டியா குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

