பசுவை காப்பாற்ற முயன்றபோது மின்சாரம் தாக்கி 4 பேர் பலி
பசுவை காப்பாற்ற முயன்றபோது மின்சாரம் தாக்கி 4 பேர் பலி
ADDED : செப் 29, 2024 05:48 AM
ஜல்பைகுரி: மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தின் தாஹிமாரி கிராமத்தைச் சேர்ந்தவர் மிதுன், 30.
இவரது வீட்டின் அருகே கொட்டகை அமைத்து, பசு மாடுகளை வளர்த்து வந்தார்.
இந்நிலையில், அந்த கொட்டகையில் இருந்த பசு மாடு நேற்று முன்தினம் இரவு வெளியே வந்தது.
அங்கு, உயரழுத்த மின் கம்பி அறுந்து கீழே கிடப்பதைப் பார்த்த மிதுன், உடனே தன் பசுவை காப்பாற்றும் நோக்கில் சென்றார்.
அப்போது, அருகில் தேங்கியிருந்த தண்ணீரிலும் மின்சாரம் பாய்ந்தது. இதை அறியாமல், மிதுன் அதில் தன் கால்களை வைத்தார்.
இதில், மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு வீட்டில் இருந்த அவரது பெற்றோர் பரேஷ் தாஸ், தீபாலி ஆகியோர் மிதுனை காப்பாற்றச் சென்றனர்.
அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. தீபாலியுடன் அவரது 2 வயது பேரன் சுமனும் இருந்ததால், அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.
இதில், நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து நிகழ்ந்தபோது மிதுனின் மனைவி வீட்டில் இல்லாததால், அவர் மட்டும் உயிர் தப்பினார்.