விபத்துக்குள்ளான கார்கள் மீது லாரி மோதியதில் 4 பேர் பலி
விபத்துக்குள்ளான கார்கள் மீது லாரி மோதியதில் 4 பேர் பலி
ADDED : ஜன 07, 2024 02:47 AM
தார்வாட் : விபத்துக்குள்ளான கார்கள் மீது, லாரி மோதியதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
தார்வாட் குந்த்கோல் பெல்லிஹட்டி கிராமம் வழியாக செல்லும், பெங்களூரு - புனே தேசிய நெடுஞ்சாலையில், நேற்று அதிகாலை 4:15 மணிக்கு இரண்டு கார்கள் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் இரண்டு கார்களில் இருந்த ஒன்பது பேரில், நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் நான்கு பேரும் ஆம்புலன்ஸ்களில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மற்ற ஐந்து பேரும், கார்களின் அருகே நின்றனர்.
அப்போது அந்த வழியாக வந்த லாரி, இரண்டு கார்கள், ஐந்து பேர் மீதும் மோதியது. இதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.
குந்த்கோல் போலீசார், விபத்து நடந்த இடத்திற்கு சென்று, படுகாயம் அடைந்தவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர்கள், ஹாசன் அரக்கல்கூடுவை சேர்ந்த மணிகாந்த், 26, சந்தன், 31, பவன், 23, பெங்களூரின் ஹரிஷ்குமார், 34, என்பது தெரிந்தது.
ஹரிஷ்குமார் அவரது குடும்பத்தினருடன், பெங்களூரில் இருந்து ஷீரடிக்குச் சென்றதும், மற்ற மூன்று பேரும் கோவா சென்றதும் தெரியவந்தது. விபத்துகளில் படுகாயம் அடைந்த ஐந்து பேரின் பெயர்கள் தெரியவில்லை.
விபத்து நடந்த இடத்தில், கர்நாடகா தொழிலாளர் நல துறை அமைச்சர் சந்தோஷ் லாட் ஆய்வு செய்தார். பனிமூட்டம் காரணமாக விபத்து நடந்தது, முதற்கட்ட விசாரணையில் தெரிந்து உள்ளது. லாரி டிரைவரை கைது செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.