ADDED : ஜன 04, 2025 11:49 PM

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் ராணுவ வீரர்கள் சென்ற வேன், பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்தனர். இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.
ஜம்மு - காஷ்மீரின் பந்திபோராவுக்கு பாதுகாப்புப் பணிக்காக ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு, நேற்று பிற்பகல் ஒரு வேன் சென்றது.
பந்திபோரா மாவட்டத்தின் எஸ்.கே.பாயன் என்ற பகுதியில் வேன் சென்றபோது, அங்குள்ள வளைவில் வாகனத்தை திருப்ப டிரைவர் முயன்றார்.
எதிர்பாராத விதமாக அவரது கட்டுப்பாட்டை இழந்த வேன், அருகே இருந்த 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர், உள்ளூர் மக்களின் உதவியுடன் வேனில் சிக்கிய ராணுவ வீரர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஆறு ராணுவ வீரர்களையும் அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில், ஏற்கனவே மூன்று பேர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்ட மூவரில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மீதமுள்ள இரண்டு வீரர்கள், மேல் சிகிச்சைக்காக ஸ்ரீநகர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில், பனிமூட்டம் காரணமாக இந்த வாகன விபத்து நேரிட்டது தெரியவந்து உள்ளது.