டில்லியில் இடிந்து விழுந்த 4 மாடி கட்டடம்: சிக்கி தவித்த 14 பேர் பத்திரமாக மீட்பு
டில்லியில் இடிந்து விழுந்த 4 மாடி கட்டடம்: சிக்கி தவித்த 14 பேர் பத்திரமாக மீட்பு
ADDED : செப் 09, 2025 08:16 AM

புதுடில்லி: டில்லியில் 4 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிய 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
வடக்கு டில்லியில் பஞ்சாபி பஸ்தி பகுதியில் 4 மாடி கட்டடம் ஒன்று உள்ளது. இந்த கட்டடம் நேற்றிரவு எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது.
அப்போது அந்த கட்டடத்தில் இருந்த 14 பேரும் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். தகவலறிந்த போலீசார், தீயணைப்புத்துறையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
சிறு,சிறு குழுக்களாக அவர்கள் பிரிந்து சென்று மீட்பு பணியில் இறங்கினர். கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் அங்கிருந்த ஏராளமான வாகனங்கள் முற்றிலும் சேதம் அடைந்தன.
இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 14 பேரும் பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்புத்துறையால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அவர்களில் சிலர் படுகாயம் அடைந்ததால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
கட்டடம் எதனால் இடிந்து விழுந்தது என்பது குறித்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. கடந்த பல நாட்களாக டில்லியில் கனமழை பெய்து வருவதன் காரணமாக, சுவர்கள் ஈரமாகி வலுகுன்றி இடிந்து விழுத்திருக்கலாம் என்று சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறி உள்ளனர்.