ராஜஸ்தானில் அரசுப் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்து 7 மாணவர்கள் பலி; பிரதமர் இரங்கல்
ராஜஸ்தானில் அரசுப் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்து 7 மாணவர்கள் பலி; பிரதமர் இரங்கல்
UPDATED : ஜூலை 25, 2025 12:57 PM
ADDED : ஜூலை 25, 2025 10:03 AM

ஜாலாவார்: ராஜஸ்தானில் அரசுப் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 7 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, காயமடைந்த மாணவர்கள் விரைந்து குணமடைய பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.
ஜாலாவார் மாவட்டத்தில் உள்ள பிப்லோடி கிராமத்தில் செயல்பட்டு வந்த அரசுப் பள்ளி கட்டடம் இன்று காலை திடீரென இடிந்து விழுந்தது. காலை 9 மணிக்கு நடந்த இந்த சம்பவத்தின் போது, சுமார் 60 முதல் 70 மாணவர்கள் பள்ளி வளாகத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் 7 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். சுமார் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
நீண்ட காலமாக பள்ளிக் கட்டடம் பழுதடைந்து ஆபத்தான நிலையில் காணப்பட்டு வந்ததாகவும், அதனை சீர் செய்வதற்கான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்று கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.