ADDED : டிச 13, 2024 12:38 AM

பாலக்காடு, கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கரிம்பா பனையம்பாடம் பகுதியை சேர்ந்த, அப்துல் சலாமின் மகள் இர்பானா ஷெரின், 13; அப்துல் ரபீக்கின் மகள் ரிதா பாத்திமா, 13; அப்துல் சலீமின் மகள் நிதா பாத்திமா, 13; ஷர்புதீனின் மகள் ஆயிஷா, 13; மற்றொரு மாணவி அஜினா, 13, ஆகியோர், கரிம்பா அரசு மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்தனர்.
இவர்கள், நேற்று பள்ளி முடிந்து மாலையில் பாலக்காடு - -கோழிக்கோடு தேசிய நெடுஞ்சாலை ஓரமாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, பனையம்பாடம் என்ற இடத்தில், பாலக்காடு நோக்கி அதிவேகமாக வந்த கேரளா பதிவு எண் கொண்ட லாரியும், பாலக்காட்டில் இருந்து மண்ணார்க்காடு நோக்கி சிமென்ட் லோடு ஏற்றி சென்ற மகாராஷ்டிரா பதிவு எண் கொண்ட லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
விபத்தில், கட்டுப்பாட்டை இழந்த சிமென்ட் லாரி, சாலையோரம் கவிழ்ந்தது. அப்போது அங்கு நடந்து சென்ற, அஜினா தவிர மற்ற 4 மாணவியர் லாரியில் சிக்கிக்கொண்டனர். போலீசார் பொக்லைன் உதவியுடன் மாணவியரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
ஆனால், பரிசோதித்த டாக்டர்கள், மாணவியர் 4 பேர் உடல் நசுங்கி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

