ஒரேநேரத்தில் 108 இடங்களில் 4 ஆயிரம் பேர் "சூரிய நமஸ்காரம்": குஜராத் கின்னஸ் சாதனை
ஒரேநேரத்தில் 108 இடங்களில் 4 ஆயிரம் பேர் "சூரிய நமஸ்காரம்": குஜராத் கின்னஸ் சாதனை
UPDATED : ஜன 01, 2024 04:29 PM
ADDED : ஜன 01, 2024 04:20 PM
ஆமதாபாத்: குஜராத்தில் 51 வெவ்வேறு ஊர்களில் 108 இடங்களில் சுமார் 4 ஆயிரம் மக்கள் சூரிய நமஸ்காரம் செய்துள்ளனர். இந்த நிகழ்வு கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இந்த நிகழ்வில் முதல்வர் பூபேந்திர பாகல் பங்கேற்றார். மோதரா சூரியக் கோயிலில் புத்தாண்டு காலையில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.
குஜராத் உள்துறை அமைச்சர் சங்வி,‛‛ இன்று நாட்டிலேயே முதல் உலக சாதனையை குஜராத் படைத்துள்ளது'' என பெருமிதம் தெரிவித்தார்.
சூரிய நமஸ்காரம்
இதுகுறித்து கின்னஸ் உலக சாதனை நடுவர் ஸ்வப்னில் தங்காரிகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நிறையப் பேர் சூரிய நமஸ்காரம் செய்யும் சாதனையைப் பரிசோதிக்க வந்துள்ளேன். இதுவரை இத்தகைய சாதனையை யாரும் செய்ததில்லை. மோதராவில் நடைபெற்ற சூரிய நமஸ்கார நிகழ்வைப் பொறுத்தவரை, சுமார் 4 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் சூரிய நமஸ்காரத்தைச் செய்துள்ளனர். 51 வெவ்வேறு ஊர்களில் 108 இடங்களில் சுமார் 4 ஆயிரம் மக்கள், சூரிய நமஸ்காரம் செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் மோடி பெருமிதம்
இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: குஜராத் 2024ஐ ஒரு குறிப்பிடத்தக்க சாதனையுடன் வரவேற்றுள்ளது. 108 இடங்களில் ஒரே நேரத்தில் அதிக மக்கள் சூரிய நமஸ்காரம் செய்து உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். நமக்கு தெரிந்தபடி, 108 என்ற எண் நமது கலாச்சாரத்தில் ஒரு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
அர்ப்பணிப்புக்கு சான்று
அந்த வகையில் மோதரா சூரியன் கோயிலும் அடங்கும். அங்கு அனைவரும் ஒன்று கூடி உலக சாதனை படைத்துள்ளனர். யோகா மற்றும் நமது கலாச்சார பாரம்பரியத்தின் மீதான நமது அர்ப்பணிப்புக்கு இது ஒரு உண்மையான சான்றாகும். சூரிய நமஸ்காரத்தை உங்கள் அன்றாட வழக்கத்தின் ஒரு அங்கமாக ஆக்கிக் கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இதனால் வரும் நன்மைகள் அளப்பரியவை. இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.