ராஜஸ்தானில் கழிவுநீர் தொட்டியில் இறங்கிய 4 தொழிலாளர்கள் பலி
ராஜஸ்தானில் கழிவுநீர் தொட்டியில் இறங்கிய 4 தொழிலாளர்கள் பலி
ADDED : மே 28, 2025 04:07 AM
ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில், நகை தொழிற்சாலையின் கழிவுநீர் தொட்டியில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி கழிவுகளை பிரித்தெடுக்க உள்ளே இறங்கிய நான்கு தொழிலாளர்கள் நச்சு வாயு தாக்கி உயிரிழந்தனர்.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள சீதாபுரா தொழிற்பேட்டையில், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் செய்யும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் நகைகள் செய்யும்போது ரசாயனத்துடன் சேர்ந்து வெளியேறும் தங்கம் மற்றும் வெள்ளி கழிவுகள் கழிவுநீர் தொட்டியில் தேங்கும்.
அவற்றை தொழிலாளர்களை வைத்து தொழிற்சாலை நிர்வாகம் அவ்வப்போது எடுத்து, அதில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி துண்டுகளை பிரித்தெடுப்பர்.
இந்த பணிக்காக நேற்று முன்தினம் இரவு சில தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு வந்தனர். அதீத வெப்பம் மற்றும் கழிவுநீர் தொட்டியில் விஷ வாயு வெளியேற்றம் காரணமாக அவர்கள் தொட்டிக்குள் இறங்க மறுத்தனர்.
தொழிற்சாலை நிர்வாகத்தினர் கூடுதல் பணம் தருவதாக கூறினர். இதை தொடர்ந்து முதலில் இரு தொழிலாளர்கள் தொட்டிக்குள் இறங்கினர். அவர்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு அலறியதால், அவர்களை காப்பாற்ற மேலும் ஆறு தொழிலாளர்கள் தொட்டிக்குள் இறங்கினர்.
விஷ வாயு தாக்கி நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்னர். மேலும் இருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இந்த விவகாரத்தை மனித உரிமை கமிஷன் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மேலும், 'அச்சால் ஜுவல்லர்ஸ்' என்ற நகை தொழிற்சாலை உரிமையாளர் மற்றும் தலைமை செயல் அதிகாரிக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.