ADDED : நவ 17, 2024 11:14 PM

கொப்பால்: காசோலை, 'பவுன்ஸ்' வழக்கில் கொப்பாலில் 40 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவர், இரண்டாவது மனைவியுடன் திரும்பினார்.
கொப்பால் மாவட்டம், அதபூர் கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாத் கவுடா பாட்டீல். 70. ராய்ச்சூர் மாவட்டம், சிந்தனுார் நகரில் உள்ள ஆர்.டி.சி.சி., எனும் ராய்ச்சூர் கொப்பால் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தார்.
வங்கி தொடர்பான பணிக்கு ஒப்பந்ததாரருக்கு 2 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கினார். ஆனால், இந்த காசோலையை வங்கியில் போட்டபோது, பணம் இல்லை என்ற தகவல் கிடைத்தது.
இதனால், ஒப்பந்ததாரர், சிந்தனுார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையறிந்த விஸ்வநாத் கவுடா பாட்டீல், 1984 டிசம்பரில் வீட்டை விட்டு வெளியேறினார்.
அவரை காணாமல், குடும்பத்தினர், உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால், அதே சிந்தனுார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசாரும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதற்கிடையில், நேற்று முன்தினம் சொந்த ஊரான அதபூர் கிராமத்திற்கு, தன் இரண்டாவது மனைவி, குழந்தைகளுடன் வந்தார். முதலில் தன் சகோதரர் பசனகவுடா பாட்டீல் வீட்டுக்கு சென்றார். பின், அங்கிருந்து, தன் முதல் மனைவியின் வீட்டுக்கு சென்றார்.
இதையறிந்த முதல் மனைவியின் மகள், சிந்தனுாரில் இருந்து வந்து தந்தையை பார்த்தார். தந்தை, மகள் இருவரும் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.
இதை கேள்விப்பட்ட கிராம மக்கள், விஸ்வநாத் கவுடா பாட்டீலை பார்க்க, அவரது வீட்டுக்கு வந்தனர்.
கைதுக்கு பயந்து மஹாராஷ்டிரா மாநிலத்துக்கு சென்ற விஸ்வநாத் கவுடா பாட்டீல், அங்கு ஒப்பந்ததாரராக பணியாற்றி வந்தார். 1994ல், இரண்டாவது திருமணம் செய்து கொண்ட அவருக்கு, குழந்தைகளும் உள்ளனர்.