ADDED : ஏப் 04, 2025 06:50 AM

பெங்களூரு: பி.டி.ஏ.,வின் 400 பிளாட்டுகள் விற்பனை ஆகாமல் பாழடைந்து கிடக்கின்றன. இதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பெங்களூரு நகரில் இருந்து 25 கி.மீ., தொலைவில் ஆலுாரில் பி.டி.ஏ., எனும் பெங்களூரு நகர மேம்பாட்டு ஆணையம், ஆறு பிளாக்குகளில், ஒரு படுக்கை அறை கொண்ட 400 பிளாட்டுகளை கட்டியது. 2014ல் இந்த வீடுகள் கட்டப்பட்டன. ஒவ்வொன்றிலும் ஒரு படுக்கை அறை, ஒரு சமையல் அறை, ஹால் உள்ளது. கட்டப்பட்டு 10 ஆண்டுகள் கடந்தும், பிளாட்டுகள் பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை.
சரியான நிர்வகிப்பு இல்லாமல், சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளன. சமையலறை ஸ்லாப்கள் இடிந்துள்ளன. வளாகத்தில் குப்பை குவிந்து கிடக்கிறது. உள்ளாட்சி இயக்குனரகம், பெங்களூரு மாநகராட்சி நிதியுதவியில், குடியிருப்பு வசதி இல்லாத, 10 முதல் 15 ஆண்டுகள் துப்புரவு தொழிலாளர்களாக பணியாற்றியவர்களுக்கு, இந்த பிளாட்டுகள் கட்டப்பட்டன.
இவற்றை பயனாளிகளுக்கு வழங்கவும் இல்லை; சரியாக நிர்வகிக்கவும் இல்லை. பாழடைந்து கிடக்கின்றன. குழாய்கள், ஒயர்கள் திருடப்பட்டுள்ளன. பிளாட்டுகள் கிடைக்காமலேயே, துப்புரவு தொழிலாளர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். இச்சூழ்நிலைக்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக, துப்புரவு தொழிலாளர் சங்கத்தினர் கூறியதாவது:
திட்டம் முடிந்து பல ஆண்டுகளாகியும், பயனாளிகளுக்கு பிளாட்டுகள் கிடைக்கவில்லை. பாழடைந்து கிடைக்கின்றன.
உடனடியாக பிளாட்களுக்கு குடிநீர், மின்சாரம் உட்பட மற்ற அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். குடியிருப்பு பகுதி, குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உடனடியாக பிளாட்டுகளை பழுது பார்க்க வேண்டும்.
ஆலுாரில் இருந்து துப்புரவு தொழிலாளர்கள், தினமும் நகருக்கு துப்புரவு பணிக்கு வந்து செல்ல, பஸ் வசதி செய்ய வேண்டும். பிளாட் பதிவு செலவை, மாநகராட்சி ஏற்க வேண்டும். பிளாட்டுகளை பயனாளிகளுக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பி.டி.ஏ., உதவி பொறியாளர் பசவராஜு கூறியதாவது:
பிளாட்டுகள் ஏற்கனவே துப்புரவு தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பயனாளிகள் தங்கள் பெயருக்கு பதிவு செய்து கொள்ளவில்லை. பதிவு செய்து கொள்ள 66,000 ரூபாய் முதல் 70,000 ரூபாய் வரை செலவாகும். இந்த தொகை அவர்களிடம் இல்லை.
பதிவு செலவை மாநகராட்சி ஏற்கும்படி, பயனாளிகள் வலியுறுத்துகின்றனர். பிளாட் 11.20 லட்சம் ரூபாயாகும். கட்டி 10 ஆண்டுகள் ஆகின்றன. யாரும் வசிக்காததால், குழாய்கள் உட்பட சிறு சிறு பொருட்கள் திருட்டு போயின. இதனால் பி.டி.ஏ., வுக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பிளாட்டுகளை பி.டி.ஏ., பழுது பார்க்கும். பயனாளிகள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

