400 குடும்பங்கள் வெளியேற்றம் பெங்., மாநகராட்சி திட்டம்
400 குடும்பங்கள் வெளியேற்றம் பெங்., மாநகராட்சி திட்டம்
ADDED : ஜன 25, 2024 04:29 AM
பெங்களூரு : பெங்களூரில் ஏரி அருகே வசிக்கும் 400 குடும்பங்களை வெளியேற்ற, மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. இதுதொடர்பாக கர்நாடகா குடிசை மாற்றுவாரியத்திற்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது.
பெங்களூரு, கே.ஆர்., புரத்தில் கங்காஷெட்டிஹள்ளி ஏரி உள்ளது. இந்த ஏரியின் அருகே 400 குடும்பத்தினர், 30 ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த ஏரியை ஆக்கிரமித்து வீடு கட்டி இருப்பதாகவும், இதனால் 400 குடும்பத்தினரையும் அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கும்படியும், கர்நாடகா குடிசை மாற்றுவாரியத்திற்கு, மாநகராட்சி கடிதம் எழுதி உள்ளது.
இந்த 400 குடும்பத்தினரையும், பெங்களூரு ரூரல் ஹொஸ்கோட் அருகே, மேடஹள்ளியில் தங்கவைக்கவும் இடம் கண்டறியப்பட்டு உள்ளது. ஆனால் மாநகராட்சியின் திட்டத்திற்கு 400 குடும்பத்தினரும் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளனர்.
'கடந்த 1992 முதல் இங்கு வசிக்கிறோம். எங்களுக்கு தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை, அரசு செய்து கொடுத்துள்ளது. இங்கு வசிக்க உரிமை பத்திரமும் கொடுத்துள்ளனர். இதனால் இங்கிருந்து செல்ல மாட்டோம்' என, அவர்கள் கூறி வருகின்றனர்.