கிரஹலட்சுமி திட்டத்தில் ரூ.4,000 ரூபாய் உதவித்தொகை 'ஓட்டுக்கு ரூட்' போடும் காங்., - எம்.பி., சுரேஷ் உறுதி
கிரஹலட்சுமி திட்டத்தில் ரூ.4,000 ரூபாய் உதவித்தொகை 'ஓட்டுக்கு ரூட்' போடும் காங்., - எம்.பி., சுரேஷ் உறுதி
ADDED : பிப் 20, 2024 06:39 AM

ராம்நகர்: ''மத்திய அரசிடம், வரிப் பணம் கிடைத்தால் 'கிரஹலட்சுமி' திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை, 2,000 ரூபாயில் இருந்து, 4,000 ரூபாயாக அதிகரிக்கப்படும்,'' என, பெங்களூரு ரூரல் காங்., - எம்.பி., சுரேஷ் உறுதி அளித்துள்ளார்.
ராம்நகரில் கிரஹலட்சுமி திட்டத்தின் பயனாளிகள் மாநாடு, நேற்று நடந்தது. இதில் எம்.பி., சுரேஷ் பேசியதாவது:
வில்லன்
கர்நாடக மாநிலத்தின் வரிப் பணத்தை வேறு மாநிலங்களுக்கு, மத்திய அரசு வழங்குகிறது. நமக்கு கிடைக்க வேண்டிய வரி பணத்தை, நமக்கே வழங்கட்டும். இதை நான் கேட்டால், என்னை வில்லன் போன்று பார்க்கின்றனர். மத்திய அரசு வரிப் பணத்தை கொடுத்தால், கிரஹ லட்சுமி திட்டப் பெண்களுக்கு வழங்கப்படும் 2,000 ரூபாய் உதவித்தொகையை, 4,000 ரூபாயாக அதிகரிப்போம்.
இம்மாநில வரிப்பணத்தை, உத்தரபிரதேசம், பிஹார், ஒடிஷாவுக்கு கொண்டு சென்றால், கர்நாடகாவின் கதி என்ன? காங்கிரஸ் அரசு செயல்படுத்திய சக்தித் திட்டத்தால், அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்கின்றனர். இதனால் பெண்கள், தங்கள் கணவருக்கு உணவளிக்காமல் ஊர் சுற்றுவதாக, பா.ஜ., மற்றும் ம.ஜ.த., தலைவர்கள் விமர்சித்தனர். ஆனால் இதுவரை எந்த கணவரும், தன் மனைவி உணவு கொடுக்கவில்லை என, போலீஸ் நிலையத்தில் புகார் செய்யவில்லை.
திவால் ஆகுமா?
ஏழைகளுக்கு பணம் கொடுத்தால், அரசு திவால் ஆகுமா? மாநில பெண்களுக்கு பணம் கொடுத்தால், அரசு மூழ்கி விடுமா? பணக்கார தொழிலதிபர்களுக்கு 17 லட்சம் கோடி ரூபாய் கடன் கொடுத்து, அதை ரத்து செய்தனர். அப்போது அரசு திவால் ஆகும் என, தோன்றவில்லையா?
'சக்தி' திட்டத்தின் கீழ், அரசு பஸ்களில் தினமும் 30 லட்சம் பெண்கள் இலவசமாக பயணம் செய்கின்றனர்.
மாகடி தாலுகாவின், 65,000 குடும்பங்களுக்கு, அன்னபாக்யா திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம். எங்களுக்கு ஓட்டுப் போடாதவர்களும், தினமும் எங்களை வசை பாடுவோரும் கூட, இலவச திட்டங்களை பெறுகின்றனர்.
எங்களின் திட்டங்களை பார்த்து, பா.ஜ.,வினர் வயிறு எரிகின்றனர். லிங்காயத்துகளும், ஒக்கலிகர்களும் கூட, திட்டங்களின் பயனை பெறுகின்றனர்.
இவ்வாறு அவர்பேசினார்.
இதன் மூலம், பெங்களூரு ரூரல் தொகுதி உட்பட காங்கிரசார் கணிசமான ஓட்டுகளை பெறுவதற்கு, காங்கிரஸ் எம்.பி., சுரேஷ் 'பிளான்' போட்டுள்ளார். இத்திட்டம் குறித்து சித்தராமையா அரசு இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

