ADDED : நவ 26, 2025 04:01 PM

புதுடில்லி : சத்தீஸ்கரில் 41 நக்சலைட்கள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு போலீசாரிடம் சரணடைந்தனர். அரசியலமைப்பு மீது நம்பிக்கை உள்ளதாக அறிவித்துள்ளதுடன், கண்ணியமான மற்றும் அமைதியான வாழ்க்கை வாழ அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில், நக்சல்கள் மற்றும் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம், அட்டகாசம் அதிகரித்ததை அடுத்து, அதை கட்டுப்படுத்தும் பணியை மத்திய அரசு முன்னெடுத்தது. 'அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள், நக்சல்கள் இல்லாத தேசமாக நாட்டை உருவாக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது' என, பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அறிவித்ததை அடுத்து, மாவோயிஸ்டுகள் மற்றும் நக்சல்களுக்கு எதிரான வேட்டை தீவிரம் அடைந்துள்ளது. முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதால், மாவோயிஸ்ட் அமைப்புகளுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியது.
அதேசமயம், அரசு கோரிக்கையை ஏற்று, இந்திய கம்யூனிஸ்ட் மாவோயிஸ்ட் உட்பட பல்வேறு நக்சல் அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய நபர்கள், ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைவது தொடர்கிறது. இது, போராடி வரும் மாவோயிஸ்ட் அமைப்புகளை மேலும் பலவீனப்படுத்தி உள்ளது. இந்த அமைப்பு, மபி, மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர் மாநில முதல்வர்களுக்கு எழுதிய கடிதத்தில் ஒட்டுமொத்தமாக சரணடைய விரும்புவதாகவும், அரசு வழங்கும் மறுவாழ்வை ஏற்பதாகவும் கூறியுள்ள அவர்கள், சரணடைய அடுத்தாண்டு பிப்ரவரி 15 வரை அவகாசம் வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்நிலையில், சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் 12 பெண்கள் உட்பட 41 நக்சலைட்கள் போலீசாரிடம் சரணடைந்தனர். அவர்களில் 32 பேரது தலைக்கு 1.19 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக பிஜாப்பூர் மாவட்ட எஸ்பி ஜிதேந்திர குமார் யாதவ் கூறியதாவது: மாநில அரசின் கொள்கையை ஏற்று 41 நக்சலைட்கள் சரணடைந்துள்ளனர். அவர்களில் 39 பேர், தெற்குதெலுங்கானா, சத்தீஸ்கர் மாநிலங்களில் செயல்பட்டு வந்தவர்கள். சரணடைந்தவர்கள் அரசியலமைப்பு மீது நம்பிக்கை கொண்டுள்ளதாக அறிவித்துள்ளனர். ஜனநாயக விதிமுறைப்படி பாதுகாப்பான மற்றும் கண்ணியமான வாழ்க்கை வாழ உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மாநில அரசின் கொள்கைப்படி அவர்களுக்கு உடனடி ஊக்கத்தொகையாக 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
சரணடைந்தவர்களில் 9 பேர் குறித்து தகவல் தருவோருக்கு தலா 8 லட்ச ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு இருந்தது. அதேபோல், 3 பேருக்கு தலா 5 லட்ச ரூபாயும், 12 பேருக்கு தலா 2 லட்ச ரூபாயும், 8 பேருக்கு தலா 1 லட்ச ரூபாயும் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் கொள்கை காரணமாக ஜனவரி முதல் பிஜாப்பூர் மாவட்டத்தில் மட்டும் 790 நக்சல்கள் வன்முறையை கைவிட்டு தேசிய நீரோட்டத்தில் இணைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

