பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தெலுங்கானாவில் 42% ஒதுக்கீடு
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தெலுங்கானாவில் 42% ஒதுக்கீடு
ADDED : மார் 19, 2025 03:05 AM

ஹைதராபாத் : தெலுங்கானாவில், வேலைவாய்ப்பு, கல்வி, உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, 42 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் இரண்டு மசோதாக்கள் அம்மாநில சட்ட சபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன், ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு நடத்தியது.
அதில், மாநில மக்கள் தொகையில், முஸ்லிம் உட்பட பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், 56.33 சதவீதம் இருப்பது தெரிய வந்தது.
இந்நிலையில், தெலுங்கானாவில் கல்வி, வேலைவாய்ப்பு, உள்ளாட்சி தேர்தலில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, 42 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் இரண்டு மசோதாக்கள் அம்மாநில சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
இதன்படி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு, 29 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாக்களுக்கு, எதிர்க்கட்சிகளான பாரத் ராஷ்ட்ர சமிதி, பா.ஜ., முழு ஆதரவு அளித்தன.
சட்டசபையில் முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியதாவது:
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிப்பதில், நாம் அனைவரும் ஒருமித்த கருத்தை எட்டி உள்ளோம். மசோதாக்களுக்கு ஆதரவளித்த எதிர்க்கட்சிகளுக்கு நன்றி.
இட ஒதுக்கீடு தொடர்பாக, பிரதமர் மோடியை சந்தித்து நாம் வலியுறுத்த வேண்டும். இதற்கு அனைத்து கட்சிகளின் தலைவர்களும் வர வேண்டும். பிரதமர் மோடியை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை, மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, பண்டி சஞ்சய் குமார் செய்ய வேண்டும்.
அரசியலமைப்பின் 9வது அட்டவணையில் புதிய இட ஒதுக்கீட்டை மத்திய அரசு சேர்த்தால் மட்டுமே, இந்த இட ஒதுக்கீட்டை செயல்படுத்த முடியும். இந்த விவகாரத்தை நடப்பு பார்லி., கூட்டத்தொடரில் எழுப்ப, காங்., தலைவர் ராகுலையும் நான் சந்திப்பேன். இதில், நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.