4வது நாள் யாத்திரை: வடகிழக்கு மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளியுங்கள்: ராகுல் வலியுறுத்தல்
4வது நாள் யாத்திரை: வடகிழக்கு மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளியுங்கள்: ராகுல் வலியுறுத்தல்
UPDATED : ஜன 17, 2024 12:39 PM
ADDED : ஜன 17, 2024 12:37 PM

கோஹிமா: '' மற்ற மாநிலங்களை போல வடகிழக்கு மாநிலங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்'' என காங்கிரஸ் எம்.பி., ராகுல் வலியுறுத்தி உள்ளார்.
லோக்சபா தேர்தலையொட்டி, மணிப்பூர் முதல் மும்பை வரையிலான இரண்டாம் கட்ட 'பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை'யை காங்கிரஸ் எம்.பி., ராகுல் கடந்த ஜன.,14ம் தேதி மணிப்பூரில் துவக்கினார். இன்று(ஜன.,17) 4வது நாள் நாகலாந்து மாநிலத்தின் மொகோக்சுங் நகரில் ராகுல் யாத்திரை மேற்கொண்டார்.
பின்னர் ராகுல் பேசியதாவது: இந்தியாவின் மற்ற மாநிலங்களை போல வடகிழக்கு மாநிலங்களும் முக்கியமானது. மக்கள் தொகை குறைவாக இருந்தாலும் பரவாயில்லை. முக்கியத்துவம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். கடந்த ஆண்டு, பாரத் ஜோடோ யாத்திரையில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை மக்களை சந்தித்து பேசினேன்.
நாகாலாந்தில் சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளது. இது நாகாலாந்து மக்களுக்கு பா.ஜ., செய்யும் துரோகம். நாகாலாந்து இளைஞர்களுக்கு எப்படி சாதகமான எதிர்காலத்தை கொண்டு வர முடியும். பிரதமர் மோடி 9 ஆண்டுகளுக்கு முன்பு நாகாலாந்து மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகள் அளித்தார்.
ஆனால் இதுவரை ஏதும் நிறைவேற்றவில்லை. நான் வெட்கப்படுகிறேன். உங்களிடம் தீர்வு இல்லை என்றால், நீங்கள் பொய் சொல்லக்கூடாது. இவ்வாறு ராகுல் பேசினார்.

