ஆயுர்வேத மசாஜ் மைய ஊழியரிடம் கொள்ளையடித்த 5 பேர் கைது
ஆயுர்வேத மசாஜ் மைய ஊழியரிடம் கொள்ளையடித்த 5 பேர் கைது
ADDED : ஜன 18, 2024 05:03 AM
பெங்களூரு: பெங்களூரில் வாடிக்கையாளர் போர்வையில் ஆயுர்வேத மசாஜ் மையத்துக்கு வந்து, சிகிச்சை அளிக்கும் பெண்ணின் கை, கால்களை கட்டிதங்க நகைகளை கொள்ளையடித்த முன்னாள் பெண் ஊழியர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு கொடிகேஹள்ளியில் திண்ட்லு சதுக்கத்தில், 'கங்கா ஆயுர்வேத மசாஜ் மையம்' உள்ளது. கடந்த 14ம் தேதி காலை நான்கு பேர் மூன்று பல்சர் பைக்கில் வந்தனர்.
அங்கு பணியில் இருந்த அனுஸ்ரீயிடம், இருவர் மசாஜ் செய்து கொள்ள எவ்வளவு தொகை என்று விசாரித்துள்ளனர். பின், தொகையை ஆன்லைனில் செலுத்துவதாக கூறி, வெளியே இருந்த மற்றொருவரை உள்ளே அழைத்து வந்தனர்.
அங்கு வந்த அவர், அனுஸ்ரீயின் முகத்தில் ரசாயனம் தெளிக்கப்பட்ட கர்சீப்பை வைத்து அழுத்தி மயக்கமடைய செய்தனர். பின், அவரின் கழுத்தில் இருந்த தாலி உட்பட தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
கண்விழித்த போது, தங்க நகைகள் இல்லாதது குறித்து, கொடிகேஹள்ளி போலீசில் புகார் அளித்தார்.
சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், ரேணுகா, குரு, பிரபாவதி, ருத்ரேஷ், சந்தீப் ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணையில், 'கங்கா ஆயுர்வேத மசாஜ் மையத்தில் ரேணுகா, முன்னர் பணியாற்றி வந்துள்ளார். அப்போது அனுஸ்ரீயுடன் பழக்கம் ஏற்பட்டது. பின் அப்பணியை விட்டு ரேணுகா விலகிவிட்டார்.
தனக்கு இருந்த கடனால் அவதிப்பட்டு வந்த ரேணுகா, தன் தோழி பிரபாவதியிடம் ஆலோசித்துள்ளார். அப்போது, அனுஸ்ரீ அணிந்திருந்த தங்க நகைகள் குறித்து ரேணுகா தெரிவித்தார்.
அதை கொள்ளையடிக்க திட்டமிட்ட இருவரும், தன் கணவர் குரு, ருத்ரேஷ், சந்தீப் ஆகியோரை தங்கள் திட்டத்தில் சேர்த்துக் கொண்டு கொள்ளை அடித்தது தெரியவந்தது.
போலீசார் மேலும் விசாரிக்கின்றனர்.