UPDATED : பிப் 04, 2025 12:09 AM
ADDED : பிப் 03, 2025 11:57 PM

பிரயாக்ராஜ்: மஹா கும்பமேளாவில் மவுனி அமாவாசை நாளில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 30 பேர் உயிரிழந்த நிலையில், மற்றொரு முக்கிய நாளாகிய வசந்த பஞ்சமியான நேற்று, அனைத்து முன்னேற்பாடுகளும் சரியாக செயல்படுத்தப்பட்டதால், எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் புனித நீராடல் நிகழ்ச்சி அமைதியாக நடந்தது.
நேற்று மட்டும் ஐந்து கோடி பேர் புனித நீராடியதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
எதிர்பார்ப்பு
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மஹா கும்பமேளா நடக்கிறது. கடந்த மாதம், 13ல் துவங்கிய இந்த மஹா கும்பமேளா, வரும் 26 வரை நடக்க உள்ளது. இந்த ஆண்டு, 40 கோடி பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகளை மத்திய அரசுடன் இணைந்து, உத்தர பிரதேச அரசு செய்துள்ளது.
அனைத்து நாட்களிலும், கங்கை, யமுனை மற்றும் புராணங்களில் கூறப்படும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மக்கள் புனித நீராடி வருகின்றனர். அதே நேரத்தில், சில முக்கிய நாட்களில், அகாராக்கள் எனப்படும் பல மடங்களைச் சேர்ந்தவர்கள், 'அமிர்த ஸ்னான்' எனப்படும் புண்ணிய நீராடுவர்.
![]() |
இந்த நாட்களில், மடாதிபதிகள், சன்னியாசிகள், துறவிகள் உள்ளிட்டோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவர். முன்னதாக, நாகா சாதுக்கள் புடைசூழ இவர்கள் பேரணியாக, திரிவேணி சங்கமத்துக்கு வருவர்.
![]() |
இதைத் தொடர்ந்து, வசந்த பஞ்சமி நாளான நேற்று, அமிர்த ஸ்னான் நிகழ்ச்சி நடந்தது.
கடந்த அமாவாசை நாளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்த முறை எவ்வித சம்பவமும் நடக்காமல் இருப்பதற்கு, உத்தர பிரதேச அரசு விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தது.
இதன்படி அதிகாலை 4:00 மணிக்கு புண்ணிய நீராடல் துவங்கியது. ஒவ்வொரு அகாராவுக்கும் தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் பேரணியாக வந்து, அந்தந்த அகாராவைச் சேர்ந்தவர்கள் புண்ணிய நீராடினர்.
கடந்த முறை, பக்தர்கள் பலரும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட முயன்றனர். இதனாலேயே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதனால் இந்த முறை கூட்டத்தை கட்டுப்படுத்த, மஹா கும்ப நகரில் உள்ள பல்வேறு படித்துறைகளில், பக்தர்கள் புனித நீராடுவதற்கு வசதி செய்யப்பட்டிருந்தது.
நேற்று மட்டும் ஐந்து கோடி பேர் புனித நீராடியதாக, உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையே, பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், புனித நீராடல் தொடர்பாக, அதிகாலை முதல் தன் அலுவலகத்தில் இருந்தபடி கண்காணித்தார்.
அமிர்த ஸ்னான்
இந்தாண்டில், மவுனி அமாவாசை நாளான ஜன., 29ம் தேதி மட்டும், மிகவும் அதிகபட்சமாக எட்டு கோடி பேர் புனித நீராடினர். மகர சங்கராந்தியான ஜன., 14ம் தேதி, 3.50 கோடி பேர் புனித நீராடினர்.
இதற்கடுத்து, வரும் 12ம் தேதி மாகி பவுர்ணமி, 26ம் தேதி மஹா சிவராத்திரி ஆகிய நாட்களில், அமிர்த ஸ்னான் நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.