ADDED : பிப் 10, 2025 07:35 AM

பெங்களூரு : ''நாட்டின் பொருளாதாரத்தை தீர்மானிப்பதில் பாதுகாப்பு துறையின் பங்கு அதிகம்,'' என ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
பெங்களூரு, எலஹங்காவில் உள்ள விமான பயிற்சி நிலையத்தில், 'ஏரோ இந்தியா விமான கண்காட்சி' இன்று முதல் 14 ம் தேதி வரை நடக்கிறது.
இது தொடர்பாக நேற்று, பெங்களூரு வந்த ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்த பேட்டி:
ஏரோ இந்தியா விமான கண்காட்சி, புதிய இந்தியாவின் வலிமையை உணர்த்தும் விதமாக இருக்கும். இந்திய விமான படையின் பலத்தை நிரூபிப்பதை தாண்டி, நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
தற்போது, பாதுகாப்பு துறையில் உற்பத்திக்கு 1.27 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இது 2025 - 2026 ம் ஆண்டிற்குள் 1.60 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உயரும். இத்துறையில் ஏற்றுமதி 21 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் உள்ளது. இதை 30 ஆயிரம் கோடி ரூபாயாக விரைவில் உயரும். இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவதில் பாதுகாப்பு தொழில்துறையின் பங்கு முக்கியமானது.
மொத்தம் ஐந்து நாட்கள் நடக்கும் கண்காட்சியில் விமான படையின் திறமையை வெளிப்படுத்தும் விதமாகவும், உள்நாட்டு கண்டுபிடிப்புகளை காட்சிபடுத்தும் விதமாகவும் அமையும். இதன் மூலம் உள்நாட்டு தயாரிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
மேலும் பல வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்யப்பட உள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை தீர்மானிப்பதில் இத்துறையின் பங்கு அதிகமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

