பல்லாரி கலவரத்தில் பயன்படுத்திய 5 துப்பாக்கிகள் பறிமுதல்! பா.ஜ., 'மாஜி' அமைச்சர்கள் உட்பட 11 பேர் மீது வழக்கு
பல்லாரி கலவரத்தில் பயன்படுத்திய 5 துப்பாக்கிகள் பறிமுதல்! பா.ஜ., 'மாஜி' அமைச்சர்கள் உட்பட 11 பேர் மீது வழக்கு
ADDED : ஜன 03, 2026 01:08 AM

பல்லாரி: கர்நாடகாவின் பல்லாரியில் நடந்த கலவரத்தில், துப்பாக்கி குண்டு பாய்ந்து காங்கிரஸ் தொண்டர் பலியானார். இது தொடர்பாக, ஐந்து துப்பாக்கிகளை போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர். மேலும், பா.ஜ., முன்னாள் அமைச்சர்கள் ஜனார்த்தன ரெட்டி, ஸ்ரீராமுலு உட்பட 11 பேர் மீது வழக்கு பதிவாகி உள்ளது. 'கலவரத்துக்கு காரணமான, காங்., - எம்.எல்.ஏ., பரத் ரெட்டியை கைது செய்ய வேண்டும்' என, டி.ஜி.பி., சலீமிடம் பா.ஜ.,வினர் புகார் அளித்துள்ளனர்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. பல்லாரி மாவட்ட அரசியலில், பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, 58, தற்போதைய பல்லாரி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பரத் ரெட்டி, 35, குடும்பத்தினர் இடையில், பல ஆண்டுகளாக மோதல் உள்ளது.
சட்டவிரோத கனிம சுரங்க முறைகேடு வழக்கில் கைதாகி, பல ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டு வெளியே வந்த ஜனார்த்தன ரெட்டியை, மீண்டும் பா.ஜ.,வில் சேர்க்கவில்லை. இதனால், கர்நாடக ராஜ்ய பிரகதி என்ற பெயரில் தனி கட்சியை துவக்கினார். கடந்த 2023 சட்டசபை தேர்தலில், தன் மனைவி அருணாவை பல்லாரியில் நிறுத்தினார். இவரது தம்பி சோமசேகர ரெட்டி, பா.ஜ., வேட்பாளராக போட்டியிட்டார். ஓட்டுகள் பிரிந்ததால், காங்கிரசின் பரத் ரெட்டி வெற்றி பெற்றார்.
அதே நேரம், கொப்பால் மாவட்டம் கங்காவதி தொகுதியில் ஜனார்த்தன ரெட்டி வெற்றி பெற்றார். பின், தன் கட்சியை பா.ஜ.,வில் இணைத்தார். தேர்தல் முடிந்த பிறகும், ஜனார்த்தன ரெட்டி - பரத் ரெட்டி மோதல் நீடித்தது. சட்டசபையில் பரத் ரெட்டியும், ஜனார்த்தன ரெட்டியும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கி பேசுவர்.
வால்மீகி சிலை
இந்நிலையில், பல்லாரி டவுன் வால்மீகி சதுக்கத்தில், வால்மீகி சிலை இன்று நிறுவப்பட உள்ளது. கர்நாடக தேர்தலில் வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக வால்மீகி சார்ந்த எஸ்.டி., சமூக ஓட்டுகள் உள்ளதால், வால்மீகி சிலை நிறுவுவதை பெரிய நிகழ்ச்சியாக கொண்டாட முடிவு செய்த பரத் ரெட்டி, காங்., தலைவர்களை வரவேற்று தன் படத்துடன் பல்லாரி நகரம் முழுதும் பேனர்கள் வைத்தார்.
பல்லாரி டவுன் சிறுகுப்பா சாலையில் உள்ள ஜனார்த்தன ரெட்டி வீட்டின் முன், பரத் ரெட்டி படத்துடன் கூடிய பேனரை வைக்க, அவரது ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் சென்றனர். தன் வீட்டின் முன் பேனர் கட்ட ஜனார்த்தன ரெட்டி எதிர்ப்பு தெரிவித்தார். பின், கங்காவதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் புறப்பட்டுச் சென்றார்.
சரமாரி தாக்குதல்
இதையடுத்து, பரத் ரெட்டியின் நண்பரான சதீஷ் ரெட்டி என்பவர், ஜனார்த்தன ரெட்டி வீட்டின் முன் நாற்காலி போட்டு அமர்ந்ததுடன், 'நீங்கள் இங்கு பேனர் கட்டுங்கள், யார் என்ன செய்கின்றனர் என்று பார்ப் போம்' என்று கூறி உள்ளார்.
இதன்படி கட்டப்பட்ட பேனர்களை ஜனார்த்தன ரெட்டி ஆதரவாளர்கள் அகற்றியதால், இருவரது ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. கற்கள், கட்டைகளை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். தகவலறிந்து அங்கு வந்த போலீசார், இவர்களை தடுக்க முயன்றதில், அவர்களுக்கும் காயம் ஏற்பட்டது.
இந்த நேரத்தில் கங்காவதி சென்ற ஜனார்த்தன ரெட்டி, தன் வீட்டிற்கு திரும்பி வந்தார். அவரது காரை பார்த்ததும் கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர், துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டார். நிலைமையை கட்டுப்படுத்த போலீசாரும் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டனர்.
இந்த நேரத்தில், பரத் ரெட்டியின் ஆதரவாளர் ராஜசேகர் ரெட்டி, 28, என்பவர், குண்டு பாய்ந்து உயிரிழந்தார். இதனால் பல்லாரியில் பதற்றம் பரவியது. நிலைமையை கட்டுப்படுத்த ஜனார்த்தன ரெட்டி வீட்டை சுற்றிலும், 200 மீட்டர் துாரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மாறி மாறி புகார்
'பேனரை அகற்றியதால் தான் கலவரம் ஏற்பட்டது' என, பரத் ரெட்டியின் ஆதரவாளர் சனல் சேகர் என்பவர் அளித்த புகாரில், ஜனார்த்தன ரெட்டி, அவரது சகோதரர் சோமசேகர ரெட்டி, முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு, பல்லாரி மாநகராட்சி கவுன்சிலர் சீனிவாஸ் மோட்கர் உட்பட 11 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ராஜசேகர் ரெட்டி பலியான விஷயத்தில் பரத் ரெட்டியும், ஜனார்த்தன ரெட்டியும் மாறி மாறி கு ற்றச் சாட்டுகளை சுமத்தினர். வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் சதீஷ் ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி, ஸ்ரீராமுலுவின் தனியார் பாதுகாவலர்கள் பயன்படுத்திய ஐந்து துப்பாக்கி களை போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர். இவை, தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. எந்த துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்தது என்பது ஆய்வக சோதனை யில் தான் தெரியவரும்.
இதற்கிடையில், பல்லாரி கலவரத்திற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ., பரத் ரெட்டி தான் காரணம் என்றும், அவரை கைது செய்ய கோரியும், ஜனார்த்தன ரெட்டி, ஸ்ரீராமுலுவுக்கு பாதுகாப்பை அதிகரிக்கும்படியும், எதிர்க்கட்சி தலைவர் அசோக் தலைமையில் மாநில போலீஸ் டி.ஜி.பி., சலீமிடம் பா.ஜ.,வினர் நேற்று புகார் அளித்தனர்.

