ADDED : மார் 06, 2024 08:57 PM

லக்னோ:உத்தர பிரதேசத்தில், இரண்டு காஸ் சிலிண்டர்கள் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உ.பி., மாநிலம் லக்னோ அருகே ககோரி கிராமத்தில் வசித்தவர் முஷீர். இவரது வீட்டில் நேற்று முன் தினம் இரவு 10:30 மணிக்கு மின்வயர் உரசல் காரணமாக தீப்பற்றியது. அப்போது, இரண்டு காஸ் சிலிண்டர்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெடித்துச் சிதறின. வீடே பற்றி எரிந்தது.
தகவல் அறிந்து தீயணைப்புப் படையினர் விரைந்து வந்தனர். அக்கம் பக்கத்து வீடுகளில் வசித்தவர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த வீட்டில் வசித்த முஷீர், 50, அவரது மனைவி ஹுஸ்ன் பானோ, 45, ராயா,7, உமர், 4, மற்றும் ஹினா, 2 ஆகிய 5 பேரும் உடல் கருகி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர்.
பலத்த காயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்ட இஷா, 17, லகாப், 21, அம்ஜத், 34, மற்றும் அனம், 18, ஆகிய நான்கு பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

