ஏரியில் கார் கவிழ்ந்து விபத்து தெலுங்கானாவில் 5 பேர் பலி
ஏரியில் கார் கவிழ்ந்து விபத்து தெலுங்கானாவில் 5 பேர் பலி
ADDED : டிச 07, 2024 11:50 PM

ஹைதராபாத்: தெலுங்கானாவில் ஏரியில் கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், அதில் பயணித்த ஐந்து பேர் உயிரிழந்தனர்.
தெலுங்கானாவின் கோதகுடேம் பகுதியில் இருந்து போச்சம்பள்ளி பகுதிக்கு கார் ஒன்று, பயணியருடன் நேற்று புறப்பட்டது. இதில் ஹைதராபாதின் எல்.பி., நகரில் உள்ள ஆர்.டி.சி., காலனியைச் சேர்ந்த ஆறு பேர் சென்றனர்.
அந்த கார், யதாத்ரிபுவனகிரி மாவட்டத்தின் ஜலால்பூர் கிராமத்தில், நேற்று அதிகாலை சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் கவிழ்ந்தது.
இதில் ஐந்து பேர் ஏரிக்குள் மூழ்கி உயிரிழந்தனர். மற்றொருவர் கார் கண்ணாடியை உடைத்து வெளியேறியதால் உயிர் தப்பினார்.
போலீசார் உயிரிழந்த ஐந்து பேரின் சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், டிரைவர் மதுபோதையில் கார் ஓட்டியதால் விபத்து நடந்தது தெரியவந்துள்ளது.