கர்நாடக அரசின் செய்தி தொடர்பாளராக 5 அமைச்சர்கள்... நியமனம்! க்குறுதி திட்டங்களை மக்களிடம் விளக்க முதல்வர் அதிரடி
கர்நாடக அரசின் செய்தி தொடர்பாளராக 5 அமைச்சர்கள்... நியமனம்! க்குறுதி திட்டங்களை மக்களிடம் விளக்க முதல்வர் அதிரடி
ADDED : மார் 14, 2024 06:31 AM

பெங்களூரு : காங்கிரஸ் அரசின் ஐந்து வாக்குறுதி திட்டங்கள் பற்றி மக்களிடம் விளக்க, அரசின் செய்தி தொடர்பாளர்களாக, ஐந்து அமைச்சர்களை முதல்வர் சித்தராமையா நியமித்துள்ளார்.
முதல்வர் சித்தராமையா தலைமையில், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில்135 இடங்களில் வென்று, தனிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. இதற்கு முக்கிய காரணம்தேர்தலின் போது கொடுக்கப்பட்ட, ஐந்து முக்கிய வாக்குறுதிகள் தான்.
அதாவது, கிரஹ லட்சுமி திட்டத்தின் கீழ், பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை, சக்தி திட்டத்தின் கீழ் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், கிரஹ ஜோதி திட்டத்தின் கீழ் 200 யூனிட் இலவச மின்சாரம். அன்னபாக்யா திட்டத்தின் கீழ் 10 கிலோ இலவச அரிசி, யுவநிதி திட்டத்தின் கீழ் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் 3,000 ரூபாய் மற்றும் டிப்ளமோ பட்டதாரிகளுக்கு மாதம் 1,500 ரூபாய் ஊக்கத்தொகை.
கஜானா காலி
இந்த ஐந்து திட்டங்களால், மக்கள் காங்கிரசை ஆதரித்தனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர், முதலில் சக்தி திட்டத்தின் கீழ், அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் துவங்கப்பட்டது.
அதன்பின்னர் கிரஹ லட்சுமி, கிரஹ ஜோதி, அன்னபாக்யா திட்டங்கள் துவங்கப்பட்டன. கடந்த ஜனவரி மாதம் 12ம் தேதி, யுவநிதி திட்டமும் துவங்கப்பட்டது.
இந்த ஐந்து திட்டங்களுக்கும் ஆண்டிற்கு 52,000 கோடி ரூபாய், அரசு செலவிடும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் சக்தி திட்டத்தின் கீழ், அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டத்தை தவிர, மற்ற திட்டங்களால் எந்த பயனும் இல்லை என்று, ஒரு சில இடங்களில் பொதுமக்கள் குற்றச்சாட்டு கூறினர்.
எதிர்க்கட்சியான பா.ஜ.,வும், ஐந்து வாக்குறுதி திட்டங்களையும் விமர்சித்தது. வாக்குறுதிகளை நிறைவேற்றி அரசின் கஜானாவை காலி செய்ய போகின்றனர் என்று, பா.ஜ., தலைவர்கள் விமர்சித்தனர்.
வாக்குறுதி திட்டங்களால் வளர்ச்சி பணிகள் நடக்கவில்லை. வாக்குறுதிகளை செயல்படுத்த அரசிடம் பணம் இல்லை என்றும், பா.ஜ., தொடர்ந்து விமர்சித்து வருகிறது. பா.ஜ.,வின் விமர்சனங்களுக்கு முதல்வர் சித்தராமையா, அவரது அமைச்சரவை சகாக்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
வாக்குறுதி திட்டங்கள் வெற்றி பெற்று உள்ளது என்பதை, மக்களிடம் எடுத்து சொல்லும் வகையில், தற்போது மாவட்டந்தோறும், வாக்குறுதி திட்ட வெற்றி மாநாட்டை, கர்நாடகா அரசு நடத்தி வருகிறது. இதில் பங்கேற்கும் முதல்வர் சித்தராமையா, வாக்குறுதிகளை பற்றி மக்களுக்கு எடுத்து கூறுவதுடன், 'பா.ஜ., உங்களை தவறாக வழிநடத்துகிறது. அந்த கட்சி தலைவர்களின் பேச்சை கேட்டு, ஏமாற்றம் அடைய வேண்டாம்' என்றும் பேசி வருகிறார்.
இந்நிலையில் கர்நாடகா அரசின் சாதனைகள், அரசின் செயல்பாடுகள், வாக்குறுதி திட்டங்களை பற்றி, மக்களிடம் தெளிவாக எடுத்து கூறும் வகையில், ஐந்து அமைச்சர்களை, கர்நாடகா அரசின் செய்தி தொடர்பாளர்களாக, முதல்வர் சித்தராமையா நியமித்து நேற்று உத்தரவிட்டார்.
வருவாய்த் துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா, பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் பிரியங்க் கார்கே, சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், வனத் துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே ஆகிய ஐவர் தான் அரசின் புதிய செய்தி தொடர்பாளர்கள் ஆவர். இவர்கள் ஐந்து பேருக்கும் அவ்வப்போது ஆவணங்கள், தகவல்களை வழங்கும்படி, அனைத்து துறைகளின் முக்கிய அதிகாரிகளுக்கு, அரசு உத்தரவிட்டு உள்ளது.
இவர்கள் ஐந்து பேரும் அரசை விமர்சிக்கும், பா.ஜ., - ம.ஜ.த.,வுக்கு தக்க பதிலடி கொடுப்பதில் வல்லவர்கள். புள்ளி, விபரங்களுடன் பேச கூடியவர்கள். இதனால் ஐந்து பேருக்கும் புதிய பொறுப்பை, சித்தராமையா கொடுத்து உள்ளார். லோக்சபா தேர்தல் நடக்க இருக்கும் நேரத்தில், அமைச்சர்கள் ஐந்து பேரும் அரசின் சாதனைகள், வாக்குறுதி திட்டங்களை மக்களிடம் எடுத்து சொல்லி, காங்கிரசுக்கு அதிக இடங்களில் வெற்றி தேடி வருவர் என்றும், சித்தராமையா நம்பிக்கையில் உள்ளனர்.
அமைச்சர் பிரியங்க் கார்கே, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்து அமைச்சர்களுக்கு செய்தி தொடர்பாளர் பதவி கொடுத்து இருப்பதை, பா.ஜ., விமர்சித்து உள்ளது.
வெகுமதியா இது?
சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் எக்ஸ் பதிவில், 'அமைச்சரவையில் உள்ள 34 அமைச்சர்களில், ஐந்து அமைச்சர்களுக்கு மட்டுமே அரசு செய்தி தொடர்பாளர் பதவியா. அப்போது மற்ற அமைச்சர்கள் அரசின் சாதனைகள் பற்றி எடுத்து கூற, தகுதி அற்றவர்கள் என்று முதல்வர் சித்தராமையா சொல்கிறாரா?
'விதான் சவுதாவில் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பிய விவகாரத்தில், ஊடகங்களை துஷ்பிரயோகம் செய்ய, அமைச்சர் பிரியங்க் கார்கே முயன்றார். அதற்கு அவருக்கு கொடுக்கும் வெகுமதியா இது?' என்று பதிவிட்டு உள்ளார்.

