ADDED : ஆக 11, 2011 11:44 PM

பெங்களூரு: கர்நாடகாவில் புதிதாக ஐந்து பேர், அமைச்சர்களாக பதவியேற்றனர்.கர்நாடக முதல்வராக சதானந்த கவுடா பொறுப்பேற்ற பின், முதன் முறையாக கடந்த 8ம் தேதி, 21 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
அமைச்சரவையின் மொத்த பலம் 34. மீதியுள்ள, 12 அமைச்சர்கள் விரைவில் பதவியேற்பர் என, அறிவிக்கப்பட்டது.இதன் பின் டில்லி சென்ற முதல்வர் சதானந்தா, பா.ஜ., மேலிட தலைவர்களை சந்தித்துப் பேசினார். டில்லியிலிருந்து பெங்களூரு திரும்பிய அவர், நேற்று காலை மீண்டும் டில்லி சென்றார். அவருடன் பா.ஜ., மாநிலத் தலைவர் ஈஸ்வரப்பாவும் சென்றார். மேலிட தலைவர்களை சந்தித்து பேசிய பின், ஐந்து பேர் அமைச்சர்களாக பதவியேற்பர் என்று அறிவிக்கப்பட்டது.கர்நாடக ராஜ்பவனில் நேற்று மாலை 5.30 மணியளவில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர்களாக பாலச்சந்திர ஜார்கிஹோலி, ஆனந்த் அஸ்னோதிகர், ராஜூ கவுடா, வர்த்தூர் பிரகாஷ், யோகேஸ்வர் ஆகியோர் பதவியேற்றனர். கர்நாடக அமைச்சரவையின் பலம், 27 ஆக உயர்ந்துள்ளது.பதவியேற்றவர்களில், பாலச்சந்திர ஜார்கிஹோலி, ஆனந்த் அஸ்னோதிகர், யோகேஸ்வர் ஆகியோர் மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்கள். வர்த்தூர் பிரகாஷ், சுயேச்சை எம்.எல்.ஏ., என்பது குறிப்பிடத்தக்கது. எடியூரப்பா தலைமையிலான நம்பிக்கையெடுப்பு தீர்மானத்தின் போது, அவரை ஆதரித்ததால், வர்த்தூர் பிரகாஷுக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.எடியூரப்பா அமைச்சரவையில், அமைச்சர்களாக இருந்த ஜார்கிஹோலி, அஸ்னோதிகர் ஆகியோருக்கு மீண்டும் பதவி கிடைத்துள்ளது. இவர்கள், எடியூரப்பாவுக்கு எதிராக கவர்னரிடம் மனு கொடுத்து, எம்.எல்.ஏ., பதவியிலிருந்து தகுதியிழந்தவர்கள். மீதி மூன்று பேரும் அமைச்சரவைக்கு புதிய முகங்கள்.