போலீசாரை சுட்டு கொன்ற வழக்கு 19 ஆண்டுக்கு பின் 5 நக்சல்கள் கைது
போலீசாரை சுட்டு கொன்ற வழக்கு 19 ஆண்டுக்கு பின் 5 நக்சல்கள் கைது
UPDATED : ஜன 09, 2024 03:06 AM
ADDED : ஜன 09, 2024 12:14 AM

துமகூரு: கர்நாடகாவில், துப்பாக்கி சூடு நடத்தி ஏழு போலீசாரை கொன்ற வழக்கில், 19 ஆண்டுகளுக்கு பின், பெண் உட்பட ஐந்து நக்சல்கள், ஆந்திராவில் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திரா - கர்நாடக எல்லைப் பகுதியில், 2005ல் நக்சல்கள் ஆதிக்கம் அதிக மாக இருந்தது. நக்சல்களை ஒடுக்க, கர்நாடக அரசு, 'நக்சல்கள் தடுப்பு படை' அமைத்திருந்தது.
துமகூரு மாவட்டம், பாவகடா, வெங்கடம்மனஹள்ளியில் நக்சல்கள் நடமாட்டம் இருந்தது. இவர்களை பிடிக்க, அங்குள்ள பள்ளி வளாகத்தில் நக்சல் தடுப்பு படையினர் முகாமிட்டிருந்தனர். 2005 பிப்ரவரி 11ல், நள்ளிரவு லாரியில் வந்திறங்கிய நக்சல் கும்பல், நக்சல் தடுப்பு படை போலீசார் மீது, சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியது.
திடீரென தாக்குதல் நடத்தப்பட்டதால், போலீசாரால் சுதாரித்து எதிர் தாக்குதல் நடத்த முடியவில்லை. இந்த சம்பவத்தில் ஏழு போலீசார், கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் பலியாகினர். போலீசாரின் அதிநவீன ஆயுதங்களை கொள்ளையடித்து, நக்சல் கும்பல் தப்பி சென்றது.
இது தொடர்பாக, விசாரணை நடத்திய பாவகடா போலீசார், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். அதில், 42 பேரின் பெயர்கள் இருந்தன.
நக்சல்கள் தாக்குதலில் போலீசார் பலியான வழக்கு குறித்து, பாவகடா மற்றும் மதுகிரி நீதிமன்றத்தில், இப்போதும் விசாரணை நடக்கிறது. வழக்கில் சம்பந்தப்பட்ட பலருக்கும், நீதிமன்றம் ஜாமின் இல்லா பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது.
இவர்களில் சிலர், ஆந்திராவில் பல்வேறு இடங்களில் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்துகின்றனர். இவர்களை பாவகடா போலீசார், படிப்படியாக கண்டுபிடித்து கைது செய்கின்றனர்.
இந்நிலையில், ஆந்திராவில் இருந்த நாகராஜ், 40, பத்மா, 40, போய ஓபலேஷ், 40, ராமமோகன், 42, ஆஞ்சனேயலு, 44, ஆகியோரை நேற்று முன்தினம் மாலை, போலீசார் கைது செய்து, பாவகடாவுக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் விசாரணை நடக்கிறது.