கள்ளக்காதலை கண்டித்த கணவரை கொன்ற மனைவி உட்பட 5 பேர் கைது
கள்ளக்காதலை கண்டித்த கணவரை கொன்ற மனைவி உட்பட 5 பேர் கைது
ADDED : ஜன 01, 2024 06:45 AM

பீதர்: கள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொன்ற மனைவி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
பீதர் அலியாம்பரா கிராமத்தில் வசித்தவர் அமித், 37. கடந்த நவம்பர் 11 ம் தேதி, கிராமத்தின் ஒதுக்குபுறமான பகுதியில் இறந்து கிடந்தார். அருகில் அவரது பைக்கும், சேதம் அடைந்த நிலையில் கிடந்தது. விபத்தில் இறந்ததாக அலியாம்பரா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் சாவில் சந்தேகம் இருப்பதாக, உறவினர்கள் புகார் அளித்தனர்.
அமித் இறந்து கிடந்த இடத்தில் பதிவாகி இருந்த, மொபைல் போன் டவரை வைத்து, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிக்கந்தர், 35, வெங்கட், 37, ஆகாஷ், 28 ஆகியோரை, போலீசார் கைது செய்தனர். அவர்கள் அமித்தை கொன்றதை ஒப்புக்கொண்டனர். ரவி பாட்டீல், 33 என்பவர் பணம் கொடுத்ததால், கொலை செய்ததாக கூறினர்.
இதையடுத்து ரவி பாட்டீலும் கைது செய்யப்பட்டார். இவருக்கும், அமித்தின் மனைவி சைத்ரா, 32 வுக்கும் கள்ளக்காதல் இருந்தது. இதுபற்றி அறிந்த அமித், கள்ளக்காதலை கண்டித்து உள்ளார். இதனால் அமித்தை தீர்த்துக்கட்டியது தெரிந்தது. இதற்கு சைத்ராவுக்கு உடந்தையாக இருந்தது தெரிந்ததால், அவரும் நேற்று கைது செய்யப்பட்டார்.