ADDED : ஜன 11, 2025 12:19 AM
மீரட்,: உத்தர பிரதேசத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து பேர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர்.
உ.பி.,யின் மீரட் மாவட்டத்தில் உள்ள லிசாரி கேட் என்ற பகுதியைச் சேர்ந்தவர் மொயின், 52; மெக்கானிக். இவருக்கு, அஸ்மா, 45, என்ற மனைவியும், அப்சா, 8, அசீசா, 4, அடீபா, 1, என்ற மகள்களும் இருந்தனர்.
மொயினை சந்திக்க அவரது சகோதரர் சலிம் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்தார். பலமுறை தட்டியும் கதவு திறக்காததால் அதிர்ச்சி அடைந்த சலிம், அக்கம்பக்கத்தினர் உதவியுடன், வீட்டின் கூரையை உடைத்தார்.
உள்ளே சென்று பார்த்த போது, 'பெட்ஷீட்'டால் சுற்றப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மொயின், அவரது மனைவி அஸ்மா இறந்து கிடப்பதை பார்த்து சலிம் கதறி அழுதார். குழந்தைகளை தேடிய போது, கட்டிலில் ஸ்டோரேஜ் பகுதியில் சாக்கு பையில் அடைக்கப்பட்ட நிலையில் மூன்று குழந்தைகளும் இறந்து கிடந்தனர்.
ஐந்து பேரின் தலை மற்றும் கழுத்தில் ஆழமான வெட்டுக் காயங்கள் இருந்தன. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், ஐந்து பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
அஸ்மாவின் மைத்துனி நஸ்ரானா, அவரது இரு சகோதரர்கள் மீது சந்தேகம் இருப்பதாக, அஸ்மாவின் சகோதரர் ஷாமிம் போலீசில் புகார் அளித்தார். இதன்படி வழக்குப் பதிந்த போலீசார், சந்தேகத்துக்குரிய இருவரை கைது செய்தனர். மேலும், பலரிடம் விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், முன்பகை காரணமாக கொலை நடந்திருப்பது தெரியவந்தது.