ராணுவ அதிகாரியின் தோழிக்கு பாலியல் வன்கொடுமை ஒடிசாவில் 5 போலீசார் சஸ்பெண்ட்
ராணுவ அதிகாரியின் தோழிக்கு பாலியல் வன்கொடுமை ஒடிசாவில் 5 போலீசார் சஸ்பெண்ட்
ADDED : செப் 21, 2024 01:18 AM
புவனேஸ்வர், செப். 21-
ஒடிசாவில், போலீசாரை தாக்கிய வழக்கில் ஜாமினில் விடுவிக்கப்பட்ட ராணுவ அதிகாரியின் தோழி புகாரளிக்க சென்ற போது, தன்னை போலீசார் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றஞ்சாட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள பரத்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு, கடந்த 15ம் தேதி இரவு புகார் அளிக்க வந்த ராணுவ அதிகாரி மற்றும் அவரது தோழி, குடி போதையில் போலீசாரை தாக்கியது மற்றும் போலீஸ் ஸ்டேஷனை சூறையாடிய புகாரில் கைது செய்யப்பட்டனர்.
மர்ம நபர்கள்
அந்த பெண்ணுக்கு, ஒடிசா உயர் நீதிமன்றம் கடந்த 18ம் தேதி ஜாமின் வழங்கியது.
இந்நிலையில், ஜாமினில் விடுவிக்கப்பட்ட ராணுவ அதிகாரியின் தோழி, செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
நானும், என் ராணுவ நண்பரும் எங்களது உணவகத்தை மூடிவிட்டு, கடந்த 15ம் தேதி நள்ளிரவில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தோம்.
அப்போது எங்களை வழிமறித்து மர்ம நபர்கள் தாக்கினர். ஒரு வழியாக அவர்களிடம் இருந்து தப்பித்து, பரத்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தோம்.
அங்கு, ஒரு பெண் கான்ஸ்டபிள் மட்டுமே இருந்தார். எங்களுக்கு உதவ மறுத்த அவர், தகாத வார்த்தைகளால் திட்டினார். சிறிது நேரத்துக்கு பின் வந்த ஆண் போலீசார், என் ராணுவ நண்பரை லாக் அப்பில் அடைத்தனர்.
ராணுவ அதிகாரியை காவலில் வைக்க முடியாது என, நான் குரல் எழுப்பியபோது, பெண் போலீசார் இருவர் என்னை சரமாரியாக தாக்கினர்.
அவர்களில் ஒருவர் என் கழுத்தை நெரிக்க முயன்றார். என் ஜாக்கெட்டை கழற்றி, இரு கைகளையும் கட்டி ஒரு அறைக்குள் என்னை அடைத்தனர்.
அந்த அறைக்கு வந்த ஆண் போலீஸ் அதிகாரி, என் மேல் உள்ளாடையை கழற்றி, மார்பில் பல முறை உதைத்தார். பின், இன்ஸ்பெக்டர் வந்து அவரது உடையை அகற்றி, மிக மோசமாக பாலியல் வன்கொடுமை செய்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
வழக்கு பதிவு
இந்த விவகாரம் விஸ்வரூபமானதை அடுத்து, பரத்பூர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் தினக்ருஷ்ண மிஸ்ரா, சப்- - இன்ஸ்பெக்டர் பைசாலினி பாண்டா, உதவி சப்- - இன்ஸ்பெக்டர்கள் சலிலாமயி சாஹூ, சாகரிகா ராத் மற்றும் கான்ஸ்டபிள் பலராம் ஹண்டா ஆகியோரை சஸ்பெண்ட் செய்து ஒடிசா காவல் துறை உத்தரவிட்டது.
இதற்கிடையே, ராணுவ அதிகாரியின் பெண் தோழி தெரிவித்த பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சஸ்பெண்ட் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் தினக்ருஷ்ண மிஸ்ரா உள்ளிட்ட ஐந்து போலீசார் மீது, குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நீதி விசாரணை!
போலீஸ் ஸ்டேஷனில், ராணுவ அதிகாரியின் தோழி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இது குறித்து நீதி விசாரணை நடத்தி விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்சம்பவம் பா.ஜ., அரசின் திறமையின்மையை காட்டுகிறது.
நவீன் பட்நாயக்
எதிர்க்கட்சி தலைவர், பிஜு ஜனதா தளம்