ADDED : ஏப் 25, 2025 06:30 AM

பஹல்காம் : ஜம்மு -- காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதல் தொடர்பான முதல் கட்ட விசாரணையில், ஆயுதங்களுடன் வந்த ஐந்து பயங்கரவாதிகள், 10 நிமிடங்களில், 26 பேரை கொன்றது தெரியவந்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், சுற்றுலாவுக்கு புகழ்பெற்ற பைசரன் புல்வெளி பகுதியில், ஏப்.22ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் தொடர்பாக நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாவது:
பைசரன் புல்வெளி பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணியர் குவிந்திருந்தனர். குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்க, பெரியவர்கள், சிற்றுண்டிகளை சாப்பிட்டபடி இயற்கை எழிலை ரசித்துக் கொண்டிருந்தனர்.
மதியம் 1:50 மணிக்கு, அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து சிலர் வந்தனர். ராணுவ உடையில் இருந்த அவர்கள், சுற்றுலா பயணியரிடம், அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று கேட்டு, சுடத் துவங்கினர்.
இவ்வாறு, ஐந்து பயங்கரவாதிகள், மக்கள் கூட்டம் அதிகம் உள்ள மூன்று இடங்களில் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில், 25 சுற்றுலா பயணியர் மற்றும் குதிரையேற்றத் தொழிலாளி ஒருவர் என, 26 பேர் கொல்லப்பட்டனர்.
வெறும், 10 நிமிடங்களில் இந்த தாக்குதலை நடத்திய அந்த பயங்கரவாதிகள், மீண்டும் வனப்பகுதிக்குள் நுழைந்து தப்பிச் சென்றனர்.
பஹல்காமில் இருந்து, பைசரன் புல்வெளி பகுதிக்கு, கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் வர முடியாது. கடினமான பாறைகள், வனப்பகுதி, நடுவில் நீரோடைகள், களிமண் பாதை என இந்த சாலை உள்ளதால், குதிரைகள் வாயிலாகவே வர முடியும். அல்லது நடந்தே வர முடியும்.
இதனால், தாக்குதல் நடந்து முடிந்து, 30 நிமிடங்களுக்குப் பிறகே, மதியம் 2:30 மணிக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மதியம் 3:00 மணிக்குப் பிறகே, காயமடைந்தவர்களுக்கு உதவிகள் கிடைத்தன.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் சிலர் உயிருடன் போராடிக் கொண்டிருந்தனர். உடனடியாக உதவி கிடைத்திருந்தால், ஒரு சிலர் பிழைத்திருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
பயங்கரவாதிகள் ஏற்கனவே திட்டமிட்டு, இந்த தாக்குதலை நிறைவேற்றியுள்ளனர். அவர்களில் சிலர், கேமரா பொருத்தப்பட்ட ஹெல்மெட் அணிந்திருந்தனர். அதில் தாக்குதல் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மிகவும் நெருக்கத்தில் இருந்து, தலையில் சுட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.