ADDED : அக் 03, 2024 08:10 PM

ஒரு காலத்தில் ஆண்களின் விளையாட்டாக இருந்த கிரிக்கெட்டை, இப்போது பெண்களும் விளையாடி வருகின்றனர். ஆண்கள் கிரிக்கெட்டுக்கு எவ்வளவு வரவேற்பு கிடைத்ததோ, அதே வரவேற்பு தற்போது பெண்கள் கிரிக்கெட்டிற்கும் கிடைத்துள்ளது. ஆண்களுக்கு நிகராக பெண்களும் கிரிக்கெட் போட்டிகளில் பந்துகளை பவுண்டரி, சிக்ஸர்களுக்கு பறக்க விடுகின்றனர்.
கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் ஐந்து விக்கெட் எடுப்பது என்பது பெருமைக்குரிய விஷயம். உலகின் அதிநவீன வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கூட எளிதில் 5 விக்கெட் கிடைத்து விடுவது இல்லை. முதல் முறையாக 5 விக்கெட் எடுப்பது பந்து வீச்சாளர்கள் தங்களுக்கு கிடைக்கும் அங்கீகாரமாக கருதுவர்.
இந்நிலையில் பெண்கள் கிரிக்கெட்டில் வயதான காலத்தில் 5 விக்கெட் எடுத்தவர் என்ற பெருமையை, மமதா மபென் பெற்று உள்ளார்.
பெங்களூரை சேர்ந்தவர் மமதா மபென், 53. கடந்த 1970 நவம்பர் 15ம் தேதி பிறந்தார். வலது கை ஆட்டக்காரராகவும், வலது கை மிதமான வேகப்பந்து வீச்சாளராகவும் இருந்தார்.
கடந்த 1993ல் இந்திய கிரிக்கெட் மகளிர் அணியில் இடம் பிடித்தார். அந்த ஆண்டு நடந்த மகளிர் கிரிக்கெட் உலக கோப்பையிலும் பேட்டிங், பந்துவீச்சில் ஜொலித்தார். இந்திய அணிக்காக 40 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த 2004 மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் எடுத்து அசத்தினார்.
பெண்கள் கிரிக்கெட்டில் அதிக வயதில் ஐந்து விக்கெட் எடுத்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. அந்தப் போட்டியில் 10 ரன்கள் விட்டுக் கொடுத்து கைப்பற்றினார்.
மொத்தம் 11 ஆண்டுகள் விளையாடிய அவர் 2004ல் ஓய்வு பெற்றார். பின், வங்கதேசம், சீனா மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும் பணியாற்றி உள்ளார். கிரிக்கெட் விளையாடிய காலத்தில் கர்நாடகா, ரயில்வே அணிக்காகவும் விளையாடி உள்ளார்.
- நமது நிருபர் -
