ADDED : மே 09, 2025 04:05 AM

டேராடூன் : உத்தரகண்ட் மாநிலத்தில், தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில், ஐந்து பெண் பக்தர்கள் உட்பட, ஆறு பேர் உயிரிழந்தனர்.
உத்தரகண்டின், உத்தரகாசி மாவட்டம், பாகீரதி நதி அருகே உள்ள கங்கோத்ரி கோவிலுக்கு, ஆறு பக்தர்கள் தனியார் ஹெலிகாப்டரில் சென்றனர்.
'ஏரோ ட்ரான்ஸ் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான அந்த ஹெலிகாப்டர், டேராடூனில் உள்ள சஹஸ்த்ரதாரா ஹெலிபேட் தளத்தில் இருந்து புறப்பட்டது.
அதை, கேப்டன் ராபின் சிங் இயக்கினார். அப்போது, கங்கனானி அருகே ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளாகி, 650 - 800 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்தது.
தகவல் அறிந்த உடன், காவல் துறை, ராணுவம், பேரிடர் மீட்புக்குழுவினர் விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்க முயன்றனர்.
ஆனால், அதற்குள் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த விஜயலட்சுமி ரெட்டி, 57, ருச்சி அகர்வால், 56, கலா சந்திரகாந்த் சோனி, 61; உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ராதா அகர்வால், 79; ஆந்திராவைச் சேர்ந்த வேதாந்தி, 48 ஆகிய ஐந்து பெண்கள் உயிரிழந்தனர்.
ஹெலிகாப்டரை ஓட்டிச் சென்ற கேப்டன் ராபின் சிங்கும் விபத்தில் இறந்தார். ஆந்திராவைச் சேர்ந்த மக்தூர் பாஸ்கர், 51, என்பவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் வரும், விமான விபத்து புலனாய்வுப் பணியகம், ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.