ADDED : ஜூலை 27, 2025 08:51 PM

நொய்டா:சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த, 5 வயது சிறுமி, அதிவேகமாக வந்த பி.எம்.டபிள்யூ., கார் மோதி உயிரிழந்தார். காயம் அடைந்த, இரண்டு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நொய்டா, 30 வது செக்டாரில் வசிப்பவர் குல் முஹமது. அவரது மகள் அயாத்,5. மைத்துனர் ராஜா.
அயாத்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அதேபகுதியில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மூவரும் ஸ்கூட்டரில் சென்றனர்.
சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த போது, அதிவேகமாக வந்த பி.எம்.டபிள்யூ., கார், ஸ்கூட்டர் மீது மோதியது. மூவரும் துாக்கி வீசப்பட்டனர்.
அதே இடத்தில், அயாத் துடிதுடித்து உயிரிழந்தாள். காயம் அடைந்த குல் முஹமது மற்றும் ராஜா ஆகிய இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த, நொய்டா 20வது செக்டார் போலீசார், காரை பறிமுதல் செய்து அதன் உரிமையாளரான 37வது செக்டாரில் வசிக்கும் யாஷ் சர்மா, 22, அவரது நண்பர் 70வது செக்டாரில் வசிக்கும் அபிஷேக் ராவத், 22, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இருவரும் பிறந்த நாள் விழாவுக்கு சென்று விட்டு திரும்பி வந்த போது, விபத்து ஏற்பட்டுள்ளது. இருவரும் மது குடித்து இருந்தனரா என்பதை அறிய, மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.