பெங்களூரு பிளாஸ்டிக் கிடங்கில் தீ 50 ஆட்டோக்கள் எரிந்து சாம்பல்
பெங்களூரு பிளாஸ்டிக் கிடங்கில் தீ 50 ஆட்டோக்கள் எரிந்து சாம்பல்
ADDED : பிப் 23, 2024 11:12 PM

பெங்களூரு: கர்நாடகாவின் பெங்களூரில் பிளாஸ்டிக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், 50 ஆட்டோக்கள் எரிந்து சாம்பலாகின.
கர்நாடக தலைநகர் பெங்களூரு, நாயண்டஹள்ளி அருகே ரிஸ்வான் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் கிடங்கு உள்ளது. இந்த கிடங்கின் முன், 100க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தும் வசதி உள்ளது.
ஆட்டோவில் வைத்து பாத்திரம், துணி விற்பனை செய்பவர்கள், உணவகம் நடத்துபவர்கள், இரவில் தங்களது ஆட்டோக்களை, இந்த பிளாஸ்டிக் கிடங்கின் முன் நிறுத்துவது வழக்கம். இந்நிலையில், நேற்று அதிகாலை 2:30 மணிக்கு, பிளாஸ்டிக் கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென வேகமாக பரவியது.
இதில், வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 50 ஆட்டோக்கள் தீப்பிடித்து எரிந்தன.
அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள், போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
நான்கு வாகனங்களில் அங்கு வந்த தீயணைப்பு படையினர், பிளாஸ்டிக் கிடங்கு, ஆட்டோக்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து, அணைத்தனர். எனினும், 50 ஆட்டோக்களும், அதில் இருந்த துணிகள், பாத்திரங்களும் முற்றிலும் எரிந்து நாசமாகின.
தகவல் அறிந்ததும் ஆட்டோ உரிமையாளர்கள் விரைந்து வந்தனர். ஆட்டோக்களும், பொருட்களும் சாம்பலாகி இருப்பதை கண்டு, கதறி அழுதனர்.
தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. வேண்டும் என்றே ஆட்டோவுக்கும், பிளாஸ்டிக் கிடங்கிற்கும் மர்ம நபர்கள் தீ வைத்தனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.