ADDED : மார் 03, 2024 06:53 AM
மைசூரு: ''என்னுடைய அரசை கவிழ்க்க, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கு தலா 50 கோடி ரூபாய் பேரம் பேசியுள்ளனர். ஆனால் எங்கள் எம்.எல்.ஏ.,க்கள் யாரும் இதற்கு பலியாகவில்லை,'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
சில நாட்களுக்கு முன்பு, தாவணகெரே காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரவி கானிகா, 'கடந்த முறை காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி அரசை கவிழ்க்க, எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கிய பா.ஜ., பின்வாசல் வழியாக ஆட்சியை பிடித்தது.
'இம்முறையும் ஆட்சியை கவிழ்க்க, 50 கோடி ரூபாயும்; அமைச்சர் பதவியும் வழங்குவதாக கூறிய வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது' என கூறியிருந்தார்.
இந்நிலையில், மைசூரில் முதல்வர் சித்தராமையா அளித்த பேட்டி:
கர்நாடகாவில் 135 எம்.எல்.ஏ.,க்களுடன் முழு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்து உள்ளோம்.
ஆனாலும், பா.ஜ.,வினர் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு தலா 50 கோடி ரூபாய் பேரம் பேசியுள்ளனர். ஆனால் எங்கள் எம்.எல்.ஏ.,க்கள் யாரும் இதற்கு பலியாகவில்லை.
அரசை கவிழ்ப்பது பா.ஜ.,வினருக்கு பழக்கம். நேரடியாக அவர்கள் ஆட்சிக்கு வந்ததே இல்லை. கர்நாடகா உட்பட நாடு முழுதும் இதையே செய்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

