சட்டசபை தேர்தல் பாதுகாப்புக்கு 50 துணை ராணுவ பிரிவுகள்
சட்டசபை தேர்தல் பாதுகாப்புக்கு 50 துணை ராணுவ பிரிவுகள்
ADDED : ஜன 09, 2025 09:58 PM
தில்ஷாத் கார்டன்:டில்லியில் சட்டசபைத் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 50க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படைகள் வர உள்ளன.
டில்லி சட்டசபைத் தேர்தல், குடியரசு தினம் ஆகியவற்றை முன்னிட்டு, தேசிய தலைநகர் பிராந்தியத்தைச் சுற்றியுள்ள மாநிலங்களின் காவல் துறை மூத்த அதிகாரிகளுடன் டில்லி காவல் துறை ஒருங்கிணைப்பு கூட்டத்தை நடத்தியது.
டில்லி காவல்துறை ஆணையர் சஞ்சய் அரோரா தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் ஹரியானா, பஞ்சாப், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், உத்தரகண்ட், பீகார், ராஜஸ்தான், சண்டிகர், ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மூத்த காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து காவல் துறை வட்டாரங்கள் கூறியதாவது:
குடியரசு தின கொண்டாட்டங்கள் மற்றும் வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலுக்கு முன்னதாக டில்லி முழுவதும் 50க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படைகள், 5,000க்கும் மேற்பட்ட போலீசார் நிறுத்தப்படுவார்கள்.
ஒரு மாதத்திற்கும் மேலாக பாதுகாப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் பரிமாறிக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகள் கூடுதல் உஷார்நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர்.
சம்பந்தப்பட்ட மாநில எல்லைகளில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்வது, சந்தேகத்திற்கிடமான நபர்களை கண்காணிப்பது, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
சட்டவிரோத துப்பாக்கிகள், மதுபானம், பணம், போதைப்பொருள் சப்ளையை முற்றிலும் தடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
டில்லியில் 3,000க்கும் அதிகமான பதற்றமான மற்றும் அதிக பதற்றமான ஓட்டுச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் துணை ராணுவத்தினரை நிறுத்த சம்பந்தப்பட்ட மாவட்ட துணை காவல் ஆணையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கண்காணிப்பு பணிக்கு, புது தில்லி, வடக்கு, மத்திய மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் 4,000 கூரை பாதுகாப்பு இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. முகத்தை அடையாளம் காணும் உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவு-டன் செயல்படும் 500 கேமராக்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

